பதிவு செய்த நாள்
31
ஜன
2014
12:01
சென்னை: சங்க காலத்தில், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்தனர், என, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, வரலாற்று துறை உதவி பேராசிரியர் சுமபாலா தெரிவித்தார். சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், "கல்வெட்டுக்கள் காட்டும் குடிபெயராய்வு என்ற தலைப்பில், நேற்று, சொற்பொழிவு நடந்தது. விழாவிற்கு, தொல்லியல் துறை ஆணையர், வசந்தி, தலைமை வகித்தார். இதில், சுமபாலா பேசியதாவது: நாயக்கர் காலத்தில், ஆந்திர மக்கள், தமிழகத்திற்கு வந்த போது, அச்சுதப்ப நாயக்கர், இலவசமாக நிலங்களையும், அதிகளவில் நன்கொடையும் வழங்கினார். தமிழகம் வந்த, ஆந்திர மக்கள், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை, கற்று கொண்டனர். அதேபோல், ஆந்திராவின் கலாச்சாரத்தை, தமிழர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். சோழர்கள் காலத்தில், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா சென்றவர்களால், ஆன்மிகம் அதிகளவில் வளர்ந்தது. சங்க காலத்தில், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாக ஒற்றுமையாக இருந்தனர். தமிழகம், ஆந்திரா இடையே நெருங்கிய உறவு இருந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.