பதிவு செய்த நாள்
31
ஜன
2014
12:01
உடுமலை: தை அமாவாசையை ஒட்டி, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது; சுற்றுப்புற கிராம மக்கள் சாரை சாரையாக சவாரி வண்டிகளில் வந்து, வழிபட்டுச்சென்றனர். உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். சிறப்புமிக்க இக்கோவிலுக்கு, அமாவாசை நாட்களில் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபட வருகின்றனர். தை அமாவாசையான நேற்று, அதிகாலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 5.15 மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. காலை 5.30 மணிக்கு, அமணலிங்கேஸ்வரருக்கு அபிஷேக பூஜையும், 6.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
சவாரி வண்டிகள் மயம்: ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில், திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரரை வழிபடவும், தங்கள் மூதாதையருக்கு திதி கொடுக்கவும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். தை அமாவாசை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவே உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் சவாரி வண்டிகளில், திருமூர்த்திமலைக்கு வந்து விட்டனர். தளி போலீசார் பாதுகாப்புப்
பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் அருகில் உள்ள திருமூர்த்தி அணைப்பகுதியில், சவாரி வண்டிகள், காளைகளை கட்டிவைத்து ஓய்வெடுத்தனர்; திருமூர்த்திமலை பகுதி நேற்றுமுன்தினம் இரவு முதலே கோலாகலமாக இருந்தது. நேற்று அதிகாலை நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற மக்கள், அமணலிங்கேஸ்வரரை வழிபட்டு, தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்துவிட்டு, சவாரி வண்டிகளில் தங்கள் பகுதிக்கு திரும்பினர். திருமூர்த்திமலையில் இருந்து தளி வரை சாலையில் சாரை சாரையாக சவாரி வண்டிகள் அணிவகுத்து சென்றன. இப்பகுதிக்கு புதிதாக வந்த சுற்றுலா பயணிகள், காளைகளின் அணிவகுப்பை, ஆங்காங்கே நின்று அதிசயமாக கண்டுகளித்தனர்.