பதிவு செய்த நாள்
10
மார்
2014
02:03
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர் திருவிழா, 18ம் தேதி துவங்குகிறது.ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களாக பெரிய மாரியம்மன், நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் பங்குனி மாதம், இக்கோவில்களில் ஒரு சேர விழா நடக்கும். இந்தாண்டு தேர் திருவிழா வரும், 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 22ம் தேதி பட்டாளம்மனுக்கு அபிஷேகம், கம்பம் நடும் விழா நடக்கிறது. 26ம் தேதி, கிராம சாந்தியும், 27ம் தேதி கொடியேற்றமும் நடக்கிறது.ஏப்., ஒன்றாம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் நிகழ்ச்சியும், இரவு, ஒன்பது மணிக்கு மாவிளக்கு, கரகம், பெரிய மாரியம்மன் விசேஷ அலங்காரத்துடன் வீதி உலா நடக்கிறது. இரண்டாம் தேதி, பொங்கல் விழா, சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து, தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், மூன்றாம் தேதி தேர்வடம் பிடித்தல், பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. நான்காம் தேதி தேர் வடம் பிடித்து சின்ன மாரியம்மன் சந்நிதி நிலை சேரும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், ஐந்தாம் தேதி கம்பங்களை எடுத்து, மஞ்சள் நீர் விழா நடக்கிறது. வரும், ஆறு தேதி மறுபூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது.