திருவாரூர் கமலாலய தெப்பக்குளம் தூர்வாரும் பணி: அதிகாரி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2014 11:03
திருவாரூர்: திருவாரூர் கமலாலய தெப்பக்குளம் தூர்வாரும் பணி குறித்து நேற்று அறநிலையத்துறை மற்றும் பொதுப் பணி துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலை துறையின் கட்டுபாட்டில் உள்ள இக்கோயில், கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஒடை 5 வேலி என்ற சிறப்புகளை கொண்டது. ஐந்து வேலி பரப்பளவை கொண்ட ஓடை முழுவதுமாக நூற்றுக்கு மேற்பட்டவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல அடுக்கு கொண்ட மாடி வீடுகளாக மாறிவிட்டது. கோயிலும் குளமும் மட்டுமே உள்ளது. 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்திலிருந்து நீர் வெளியேறும் பாதையானது அரசியல் பிரமுகர் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள இந்த குளத்தில் ஆழித்தேரோட்டத்திற்கு பின்னர் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதாலும், ஆழித்தேர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நடைபெறாமல் இருந்து வருகிறது.
கடந்தாண்டு பெய்த கன மழையின் காரணமாக தெப்ப குளத்தின் வடக்கு புற மதில் சுவர் 80 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இதை புதிதாக கட்டுவதற்கு தமிழக சுற்றுலா துறை மூலம் ரூ.89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்த கமலாலய தெப்பகுளத்தினை தூர்வாருவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். கமலாலய குளத்திற்கு ஒடம்போக்கி ஆற்றிலிருந்து மடப்புரம் வழியாக நீர் உள்ளே வரும் பாதையும், குளத்திலிருந்து நீர் வெளியேறும் பாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தூர் வாருவதற்காக குளத்து நீரினை வெளியேற்றும் போது அந்த நீரினை எந்த வழியாக கொண்டு செல்வது என்று நேற்று அறநிலையதுறை மற்றும் பொது பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் நீர் வெளியேறும் பாதையானது தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த சாலையினை ஜே.சி.பி., மூலம் நேற்று தோண்டி பார்த்தனர். இந்த ஆய்வு பணியில் அறநிலைதுறை கூடுதல் ஆணையர் (திருப்பணிகள்) கவிதா, தஞ்சை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ஜெயகுமார் மற்றும் பொதுபணித் துறை திருச்சி தலைமை பொறியாளர் பைந்தமிழ்செல்வன், கண்காணிப்பு பொறியாளர் சம்பத் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர்.