பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
புதுச்சேரி: உலக நன்மைக்காக, விழுப்புரத்தில் அதிருத்ர சதசண்டி யாகம் வரும் 15ம் தேதி தொடங்கி, 11 நாட்கள் நடத்தப்படுகிறது. இதுகுறித்து திருச்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைங்கர்ய டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கலியுகத்தின் கடுமையிலிருந்து விடுபட அவ்வப்போது ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட வேண்டும் என காஞ்சி மகா சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாணைப்படி தமிழகத்தின் முக்கியத் தலங்களில் ஆண்டுதோறும் பெருவேள்விகள் சாஸ்திரோக்தமாய் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான அதிருத்ர சதசண்டி மகா யாகம், விழுப்புரத்தில் வரும் 15ம் தேதி தொடங்கி, 25ம் தேதி வரை வேதகால முறைப்படி நடத்தப்படுகிறது. விழுப்புரம் சங்கர மடத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்சியில், தினமும் காலையில் கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், தொடர்ந்து மகன்யாசம், ஸ்ரீருத்ர ஜெபம், ஹோமம், பாராயணம் ஆகியவை நடைபெறும். மாலையில் வேதவிற்பன்னர்களின் விவாதங்கள், சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், இரவு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ருத்ரகிரமார்ச்சனை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. ஹோம நாட்களில் அன்னதானம் நடைபெறும். அதிருத்ர மகாயாக நிகழ்ச்சிகளை திருவானைக்காவல் சிவராமகிருஷ்ண சாஸ்திரிகள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் நடத்த உள்ளனர். சதகண்டி ஹோம நிகழ்ச்சிகளை, கும்பகோணம் தினகர சர்மா தலைமையிலான குழுவினர் நடத்த உள்ளனர். இந்த தெய்வீக கைங்கர்யத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைங்கர்ய டிரஸ்ட், டி.ஏ.எப் 4-பாரத் பிளாசா, மூலத்தோப்பு, மேலூர் ரோடு, ஸ்ரீரங்கம். என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 94437 33573 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.