பதிவு செய்த நாள்
06
மே
2014
12:05
தேனி : தேனியில் கோயில் திருவிழாக்கள், தகராறு திருவிழாக்களாக மாறுவதை தவிர்க்க, கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. தேனி மாவட்டத்தில், ஏப்ரல், மே மாதங்களில், கோயில்களில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளோர், அவர்களது ஊரில் உள்ள அம்மனுக்கு விழா எடுக்கின்றனர். இதன் நோக்கம், கோடையில் விரதம் இருந்து, சுத்தமாக இருந்தால் கோடை நோய்கள் நெருங்காது. மேலும்,வெளியூர்களில் உள்ள உறவினர்களை வரவழைத்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தான், இந்த விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில், பல விநோதமான வழிபாடுகளும் நடக்கிறது. துடைப்பத்தால் அடிப்பது, முளைப்பாரி, அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்தி கடன் நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த திருவிழாக்கள் அனைத்தும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த திருவிழாக்கள், கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், ஓற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு பதில், தகராறுகளையும், பிரச்னைகளையும் உருவாக்குகிறது. கடந்த வாரத்தில், வருஷநாடு அருகே உள்ள தங்கமாள்புரம் காளியம்மன் கோயில் திருவிழாவில், இரவில் கரகாட்டம் நடைபெற்ற போது, போலீசாருக்கும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.கடைசியில் வழக்குபதிவு மற்றும் கைதில் முடிந்தது. போடி அருகே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவில், ஒரே ஊரில் தகராறு.போலீசார் குவிப்பு. இது போன்ற தகராறுகள் தொடர்கிறது. இதனால், போலீசார் குவிப்பு, வழக்குபதிவு, என திருவிழாவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய கிராம மக்கள், அதற்கு மாறாக உள்ளனர். இதனால் திருவிழாவின் நோக்கமே மாறிவருகிறது. காப்பு கட்டி விரதம் இருந்தவர்கள், நிம்மதியாக இருக்க முடியவில்லை. போலீசாரும் உறக்கம் இன்றி காவலில் ஈடுபடுகின்றனர்.சமூக ஆர்வலர் துரை கூறுகையில்," கோயில் திருவிழாவில், ஒவ்வொருவரிடம் வரி வசூல் செய்து, அதில் எஞ்சிய பணத்தை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு மண்டபம், தண்ணீர் தொட்டி உள்ளிட்ட நல்ல திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு வர வேண்டும், என இளைஞர்களும், பெரியவர்களும் முடிவு செய்து செயல்பட வேண்டும். தற்போது வரி வசூல் செய்த பணத்தை, வழக்குகளுக்கு செலவிடுகின்றனர், என்றார்.