பதிவு செய்த நாள்
27
மே
2014
01:05
பழநி : பழநி மலைக்கோயிலில் நடைபெறும் கால பூஜைகளில் பங்கேற்பதற்கான, நிரந்த கட்டளைதாரர், கட்டணத்தை ரூ.5 ஆயிரத்திலிருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் தினமும் 6 காலபூஜைகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள, கட்டளைதாரர் அடிப்படையில், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தற்காலிமாக கலந்து கொள்வதற்கு, ரூ.750 ம், நிரந்தர கட்டளையாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது. இதில், நிரந்தர கட்டளைதாரர்கள், கட்டணத்தை, 5 மடங்குகள் உயர்த்தி, ரூ.25ஆயிரம் வசூலிக்க, இந்துசமய அறநிலையத்துறை, முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கருத்தை கேட்டறிய, நிரந்தர கட்டளைதாரர்களுக்கு கடிதம் அனுப்பட்டு வருகிறது. இதற்கு கட்டளைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து பழநி விஸ்வ இந்து பரிசத் நகரச்செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், “தற்போது நடுத்தர மக்கள், சாமானியர்கள் காலபூஜையில் நிரந்தர கட்டளைதாரர்களாக உள்ளனர். ரூ.5 ஆயிரத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்தினால், அவர்கள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்துஅறநிலையத்துறை வியாபார நோக்கத்தில் செயல்படுகிறது. கட்டண உயர்வு முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்,” என்றார்.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அபிஷேக பூஜை சாமான்கள் விலை உயர்ந்துள்ளது. நிரந்த கட்டளை தாரர்கள் தொகை, வங்கிகளில் டிபாசிட் செய்யப்படுகிறது. அதற்கான வட்டிவிகிதம் குறைந்துள்ளதால், நிரந்தர கட்டளைதாரர் தொகையை உயர்த்த, கருத்து கேட்டுள்ளோம். இதில் ஆட்சேபணை இருந்தால், தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பலாம். பக்தர்களின் கருத்து அடிப்படையில், கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும், ” என்றார்.