பதிவு செய்த நாள்
24
ஜூலை
2014
12:07
திருப்பூர் : திருப்பூர் செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, பெருமாள் கோவிலில் இருந்து சீர் வரிசை பொருட்கள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. வரும் 29ல் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பூர் நகரின் காவல் தெய்வமான, செல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம், பூச் சாட்டு, கணபதி ஹோமம், கொடியேற்றம், சக்தி கரகம் அழைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, தங்கையின் திருமணத்துக்கு, அண்ணன் கொடுக்கும் சீர்வரிசையாக, ஸ்ரீவீரராக வப் பெருமாள் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை 6.00 மணிக்கு, பி.என்., ரோடு கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் நடக்கிறது.
நாளை (25ம் தேதி), டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வருதல், 26ம் தேதி காலை 6.00 மணிக்கு, கொடுமுடி தீர்த்தம் எடுத்து வருதல், ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம் மற்றும் அங்காளம்மன் அலங்காரம் செய்யப்படும். 27ம் தேதி, சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், அம்மன் சவுடேஸ்வரி அலங்காரம் நடக்கிறது. 28ம் தேதி காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், குண்டம் திறப்பு, இரவு 9.00 மணிக்கு குண்டத்துக்கு அக்னி இடும் நிகழ்ச்சி நடைபெறும். 29ம் தேதி காலை 6.00 மணிக்கு, முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல், அக்னி அபிஷேகம், பொங்கல் விழா மற்றும் அன்னதானம் நடக்கிறது. மாலை, பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை, சிறப்பு அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடக்கின்றன.