பதிவு செய்த நாள்
12
ஆக
2014
12:08
கரூர்: நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில், நாத உற்சவ விழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், நெரூரில், சௌந்திர நாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருப்பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், அனைத்து வளமும் நறைவாகப் பெற்று நலமுடன் வாழ வேண்டும், என்பதற்காக நாத உற்சவ விழா நடந்தது. காலை, 6 மணிக்கு, சென்னை, சைதை நடராஜ தமிழ் வேத பாராயண பக்த ஜனசபை நிறுவனர் ஈசான சிவம் ஜோதி ராமலிங்கம் குழுவினரின் திருவாசக முற்றோதல் துவங்கியது. காலை, 11 மணிக்கு தேனி மாவட்டம், சின்னமனூர் பேராசிரியர் பாண்டியன் திருவாசக விளக்க உரையை தொடர்ந்து, திருவாசக முற்றோதல் நடந்தது. மாலை, 3 மணிக்கு, சென்னையைச் சேர்ந்த திருமுறைக்களஞ்சியம் பிரபாகரமூர்த்தி, "திருக்கையிலையும், தீர்த்தமாமலைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாலை, 5 மணிக்கு, 108 தவில் மற்றும், 108 நாதஸ்வர கலைஞர்களின் நாத உற்சவம் நடந்தது. தொடர்ந்து, அக்னீஸ்வரர், சௌந்தர நாயகி, சுப்பரமணியர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் வழங்கப்பட்டது.