பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீமந்நாராயணனே முழுமுதற்பொருள் என்ற உண்மையைப் பறைசாற்றியவர் பெரியாழ்வார். இதை பரதத்துவ நிர்ணயம் என்பர். இவர் தன்னை யசோதையாகப் பாவித்து கண்ணனைத் தாலாட்டிய பாடல்கள் தமிழில் பிள்ளைதமிழ் என்னும் புதிய இலக்கியத்திற்கு வித்திட்டன. மாணிக்கம் கட்டி, வயிரம் இடைக்கட்டி, ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டிலில் கண்ணனைத் தளர்நடைகண்டு ஆனந்தப் பரவசமடைகிறார். சின்னப்பையன் என்று கண்ணனை நினைக்காதீர்கள். சிங்கமாக வந்து இரணியனைக் கொன்றவன் இவன். நிலவே ! என் பிள்ளைகளோடு விளையாட உடனே வா ; இல்லாவிட்டால் மகாபலிக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் என்று பிள்ளைப் பாசத்தோடு இவர் பாடிய தாலாட்டுப் பாடல்கள் ஒரு தாயில் அன்பை வெளிப்படுத்துபவையாகும்.