பதிவு செய்த நாள்
16
ஜன
2015
05:01
தஞ்சாவூர்: மஹரசங்கராந்தி விழாவையொட்டி, தஞ்சை பெருவுடையார் கோவில் நந்தியம் பெருமானுக்கு, 1,000 கிலோ காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நந்தியம்பெருமானுக்கு முன், 108 கோபூஜையும் செய்யப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மஹரசங்கராந்தி பெருவிழா நடக்கும். இந்த ஆண்டின் மஹரசங்கராந்தி பெருவிழா, நேற்று துவங்கியது. பெருவுடையார் திருமேனிக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. பெருவிழாவையொட்டி நந்தியம் பெருமானுக்கு, 1,000 கிலோ காய்கறி,1,000 கிலோ பழங்கள், 1,000 கிலோ மலர்கள், 1,000 கிலோ இனிப்பு வகைககள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நந்தியம் பெருமான் முன்னிலையில், 108 பசுக்களுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோ பூஜை நடந்தது. இதில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை தரிசித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், அரண்மனை தேவஸ்தானம் சார்பில், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.