பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
03:06
முகலாய மன்னர் அக்பரது அவையில் மாபெரும் இசைக் கவியாகவும் சகல கலைகளில் விற்பன்னராகவும் விளங்கியவர் தான்சேன். இவரது குருதான் ஹரிதாஸ். ஒரு முறை தான்சேனிடம், இசையில் இந்த அளவுக்கு சிறப்புற்றுத் திகழ்கிறாயே தான்சேன்... உண்மையிலேயே நீ எனக்குக் கிடைத்த பெரும் கொடை என்று புகழ்ந்தார் அக்பர். அப்போது தான்சேன், மன்னா ... நான் இந்த அளவுக்கு புகழ் பெற்றுத் திகழ்கிறேன் என்றால் அதற்கு என் குருநாதர்தான் காரணம் என்றார். அதற்கு அக்பர், குருநாதரா... யார் அவர் ? அவரை ஒரு நாள் என் அரசவைக்கு அழைத்துப் பாடச் சொல்கிறாயா... நான் கவுரவரம் செய்கிறேன் என்றார் ஆர்வமாக. அதற்கு தான்சேன், மன்னா... அவர் அப்படிப்பட்டவர் இல்லை. நாம் கூப்பிட்டால் எல்லாம் வந்துவிட மாட்டார். அவர் இருப்பது வனாந்திரம் போன்ற ஒரு பகுதியில் கிருஷ்ண பக்திதான் அவருக்கு பிரதானம் என்று ஆரம்பித்து, தன் குருநாதரான ஹரிதாஸ், ஸ்ரீபாங்கே பிஹாரிஜிக்கு சேவை செய்து கொண்டிருப்பது பற்றி சொன்னார் தான்சேன். தான்சேன்... நான் எப்படியாவது உன் குருநாதர் ஹரிதாஸை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய் என்றார் அக்பர். மன்னா... தாங்கள் மன்னர் என்கிற அடையாளத்துடன் அங்கே சென்றால், என் குருநாதரின் தரிசனம் கிடைக்காமல் போகலாம். எனவே, சாதாரண ஆளாக மாறுவேடத்தில் என்னுடன் வாருங்கள். பிருந்தாவனத்தில் ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயத்தில் ஹரிதாஸ் நிகழ்த்தும் பஜனையைக் கேட்பதற்கென்றே நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். உங்களது விருப்பப்படி அவரது சங்கீதத்தை நீங்கள் அங்கே கேட்கலாம் மகிழலாம் என்றார் தான்சேன்.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே ஆளுகின்ற மன்னன் என்றாலும், ஒரு தெய்வ சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில், தான்சேனுடன் மாறுவேடத்தில் புறப்பட்டார் அக்பர். என்ன வேடம் தெரியுமா ? தான்சேனுக்கு உதவியாளராக ! அதாவது, தான்சேனது தம்பூரா மற்றும் அவரது மூட்டை முடிச்சுக்களை சுமந்து வர வேண்டிய பணி. அக்பரும் தான்சேனும் பிருந்தாவனத்தை அடைந்தனர். அன்று எக்கச்சக்க கூட்டம். பக்தர்கள் அனைவரும் யமுனையில் நீராடிவிட்டு, ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயம் வந்து ஹரிதாஸையும் வணங்கி, கிருஷ்ணரை தரிசித்தனர். அன்றைய தினம் ஹரிதாஸுக்கு உடல்நலக் குறைவு. எனவே, அவரது சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில் வந்தவர்கள் ஏமாந்து போனார்கள் - அக்பர் உட்பட. தான்சேனும், அக்பரும் ஹரிதாஸை விழுந்து நமஸ்கரித்தனர். தன் சீடனான தான்சேனை ஆசிர்வதித்து அன்றைய பஜனையைத் தலைமை தாங்கி நடத்துமாறு உத்தரவிட்டார் ஹரிதாஸ். ஒரு புன்னகையுடன் அக்பரையும் ஆசிர்வதித்தார். மகா ஞானியான ஹரிதாஸுக்கு மன்னரை அடையாளம் தெரியாதா ?! ஆனால், தான்சேன் அன்று அபஸ்வரமாகப் பாடினார். கூடி இருந்த அனைவருக்கும் வியப்பு. ஆனால், குருநாதரான ஹரிதாஸுக்கு மட்டும் இதற்கான காரணம் புரிந்தது. தப்பும் தவறுமாகப் பாடிய தான்சேனை நோக்கி, நிறுத்து என்பது மாதிரி கை காண்பித்து விட்டு, ஹரிதாஸே பாட ஆரம்பித்தார்.
ஹரிதாஸ் கணீரென்று பாடப் பாட.... அந்த நாத இன்பத்தில் தன்னையே மறந்தார் அக்பர். பாடல் முடிந்ததும் அக்பர் ஓடோடிச் சென்று, ஹரிதாஸுக்கு நமஸ்காரம் செய்தார். பிறகு, என்ன மன்னரே.... உம் ஆசைப்படி என் சங்கீதம் கேட்டாயிற்று. திருப்திதானே ? என்று கேட்டார். ஹரிதாஸ். அக்பர் சிலிர்த்துப் போனார். பகவான் ராமகிருஷ்ணர் பரமஹம்சரும் ஸ்ரீபாங்கே பிஹாரி ஆலயத்துக்கு வந்து, இந்த கிருஷ்ணனின் அழகில் மயங்கி, தன்னையே பறி கொடுத்தாராம். பிருந்தாவனத்தில் கிடைத்த இந்த அற்புத தரிசனத்தை விடுத்து, கல்கத்தா புறப்பட அவருக்கு மனமே வரவில்லை. பிருந்தாவனத்தின் அமைதியும், பாங்கே பிஹாரிஜியின் அழகும் பரமஹம்சரைக் கட்டிப் போட்டது. இந்த ஸ்ரீகிருஷ்ணனின் சன்னதிக்கு அருகே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தாராம். ஸ்ரீபாங்கே பிஹாரிஜியின் சன்னதியில் இருந்து கிளம்ப முற்படும்போதெல்லாம், மாயவனான இந்த ஸ்ரீகிருஷ்ணன், பரமஹம்சரைத் தன் அருகே வரவழைத்து, அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வேறெங்கும் செல்ல விடாமல் தடுத்து நாடகம் ஆடினானாம். வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா மாவடத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணருடைய எண்ணற்ற திருவிளையாடல்களும் லீலைகளும் நடந்துள்ளன. மதுரா மாவட்டத்தில் இருக்கும் பிருந்தாவனம் என்கிற திவ்ய ÷க்ஷத்திரம், ஸ்ரீகிருஷ்ணன் இன்றைக்கும் நடமாடும் புனித பூமியாகக் கருதப்படுகிறது. இந்த பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு எண்ணற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில், மிகுந்த சாந்நித்தியம் கொண்டதும், புராதனமானதுமான ஆலயம் - பாங்கே பிஹாரிஜி மந்திர் ஆகும் (கிருஷ்ணனை இங்கு பாங்கே பிஹாரிஜி என்கிறார்கள்.) ஹரிதாஸ் என்கிற துறவியின் முயற்சியால்தான் இந்த பாங்கே பிஹாரிஜி கோயில் பிருந்தாவனத்தில் கட்டப்பட்டது. பிரபலம் அடைந்தது. ஸ்ரீகிருஷ்ண பகவானை பிருந்தாவனத்தில் நேருக்கு நேர் தரிசனம் செய்தவர் ஹரிதாஸ். இப்படி பல மகான்களோடு சம்பந்தப்பட்டது இந்த பாங்கே பிஹாரிஜி ஆலயம். பிருந்தாவனம் வருபவர்கள் எத்தனையோ கிருஷ்ணன் ஆலயங்களை தரிசித்தாலும், இந்த ஆலயத்துக்கு கூடுதல் மகத்துவம் உண்டு.