பதிவு செய்த நாள்
05
மே
2015
02:05
ஓசூர்: தளி, வேணுகோபால ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். தளி அருகே, தளவாய் நஞ்சராஜ மன்னன் காலத்தில் கட்டப்பட்ட, வேணுகோபால ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழாவில், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. தேரில் எழுந்தருளிய மூலவர் வேணுகோபால ஸ்வாமியை தரிசனம் செய்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய மாட வீதிகள் வழியாக சென்ற தேர், மீண்டும் நிலையை அடைந்தது. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும், நீர்மோர், அன்னதானம் ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.