திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு... ஒரு மணி நேர தேரோட்டத்தால் அதிருப்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2015 11:05
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் தேர் சிறிய தேரை மாற்றி விட்டு, மிகப் பெரிய தேர் வடிவமைக்க வேண்டும், என பக்தர்கள் விரும்புகின்றனர். திருவாடானை அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயிலில் 6 அடி உயரத்தில் சிறிய தேர் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திரு விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இத்தேர் மிகவும் சிறியதாக இருப்பதால் ஒரு மணி நேரத்திற்குள் தேரோட்டம் முடிந்து விடும். இது குறித்து திருவெற்றியூர் மருது பாண்டியன் கூறுகையில், ""பாகம் பிரியாள் கோயிலுக்கு பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் மூலம் மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இக்கோயில் தேர் மிகவும் சிறியதாக சப்பரம் போல் உள்ளது. திருவாடானை, காளையார் கோயில் போல் பெரிய தேரை வடிவமைக்க தேவஸ்தானம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதுகுறித்து கோயில் கண்காணிப் பாளர் சரவண கணேசன் கூறுகையில், ""தேரோட்டம் நடைபெறும் வீதிகள் மிகக்குறுகலாக இருப்பதால் தேரை திருப்புவது சிரமமாக உள்ளது. பெரிய தேர் செய்தால் மேலும் சிரமம் ஏற்படும். எனவே தற்போதுள்ள சிறிய தேரை சற்று உயரப்படுத்தி புதுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இக்கோயிலின் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, எண்ணப்பட்டன. அதில் ரொக்கம் ரூ.11 லட்சத்து 71 ஆயிரத்து 537, தங்கம் 145 கிராம், வெள்ளி 605 கிராம் இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சம். உண்டியல் எண்ணிக்கையின் போது இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் ரோசாலிசுமதா, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கவுரவ கண்காணிப்பாளர் முத்துகண்ணன் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.