பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1 ஸ்வாயம்புவ: மனுரதோ ஜனஸர்க சீல:
த்ருஷ்ட்வா மஹீம் அஸமயே ஸலிலே நிமக்நாம்
ஸ்ரஷ்டாரம் ஆப சரணம் பவதங்க்ரி சேவா
துஷ்டாசயம் முநிஜனை: ஸஹ ஸத்யலோகே
பொருள்: குருவாயூரப்பா! ஸ்ருஷ்டிச் செயலில் ஈடுபட்டிருந்த மநு (ப்ரும்மாவால் உருவாக்கப்பட்டவன்) ப்ரளயம் அல்லாத ஒரு காலத்திலேயே பூமி நீரில் முழுகுவதைக் கண்டு முனிவர்களுடன் விரைவாக ப்ரம்ம லோகமான ஸத்யலோகத்திற்குச் சென்றான். அங்கு உன்னுடைய திருப்பாதங்களில் சரணம் புகுவதையே தனது தொழிலாகக் கொண்டதால் மகிழ்வான இதயம் கொண்ட ப்ரும்மாவின் கால்களில் சரணம் அடைந்தான்.
2 கஷ்டம் ப்ரஜா: ஸ்ருஜதி மயி அவனீ நிமக்னா
ஸ்தானம் ஸரோஜபவ கல்பய தத் ப்ரஜாநாம்
இதி ஏவம் ஏஷ கதிதோ மனுனா ஸ்வயம்பூ:
அம்போருஹாக்ஷ தவ பாதயுகம் வ்யசிந்தீத்
பொருள்: குருவாயூரப்பனே! தாமரை மலர் போன்ற அழகான கண்களை உடையவனே (அம்போருஹாக்ஷ)! நான் மக்களை படைத்துக் கொண்டிருக்கும் போதே இந்தப் பூமியானது முற்றிலும் நீரில் மூழ்கி விட்டது. இது வருத்தமடைய வைக்கிறது. ப்ரும்மாவே! நான் படைக்கும் மக்களுக்கு அவர்கள் வாழ ஓர் இடத்தை உண்டாக்க வேண்டும் என்று இப்படியாக மனுவால் வணங்கப்பட்ட ப்ரும்மா உன்னுடைய திருவடிகளை அல்லவா த்யானித்தான்?
3. ஹா ஹா விபோ ஜலம் அஹம் ந்யபிபம் புரஸ்தாத்
அத்யாபி மஜ்ஜதி மஹீ கிம் அஹம் கரோமி
இத்தம் த்வத் அங்க்ரியுகளம் சரணம் யத: அஸ்ய
நாஸாபுடாத் ஸமபவ: சிசுகோலரூபீ
பொருள்: குருவாயூரப்பனே! உன்னிடம் வந்த ப்ரும்மா, எங்கும் நிறைந்துள்ளவனே (விபோ)! நான் ப்ரளயத்தின் முடிவில் அதிகமாகவே நீரைக் குடித்து விட்டேன். இருந்தாலும் இன்னமும் பூமி மூழ்குகிறது. நான் என்ன செய்வது? கஷ்டம்! கஷ்டம்! என்று கூறியபடி உனது திருவடியில் சரணம் என்று புகுந்தான். அப்போது அவனைக் காப்பாற்ற அவனது மூக்கில் இருந்து நீ வெண்மையான பன்றிக் குட்டியாகத் தோன்றினாய் அல்லவா? (இப்படியாகத் தோன்றியதால் இந்த கல்பத்திற்கு ஸ்வேத வராஹ கல்பம் என்று பெயர் ஏற்பட்டது).
4. அங்குஷ்ட மாத்ர வபு: உத்பதித: புரஸ்தாத்
பூய: அத கும்பி ஸத்ருச: ஸமஜ்ரும்பதா: த்வம்
அப்ரே ததாவீதம் உதீக்ஷ்ய பவந்தம் உச்சை:
விஸ்மேரதாம் விதி: அகாத் ஸஹ ஸுனுபி: ஸ்வை:
பொருள்: குருவாயூரப்பனே! இப்படித் தோன்றும் போது நீ கட்டைவிரல் அளவே இருந்தாய் (அங்குஷ்டம் என்றால் கட்டைவிரல். ப்ரஹ்ம சூத்திரத்தில் பரம் பொருளை அங்குஷ்ட மாத்ர: புருஷ: என்றே கூறப்பட்டது). அதன் பின்னர் பெரிய யானை அளவிற்கு நீ வளர்ந்தாய். தொடர்ந்து மேகம் வரை வளர்ந்தாய். இப்படியாக நீ வானத்தின் அளவு உயர்ந்து வளர்ந்ததைக் கண்ட ப்ரும்மா தன்னுடைய புத்ரர்களுடன் சேர்ந்து தானும் வியப்படைந்தான் அல்லவா?
5. க: அஸௌ அசிந்த்ய மஹிமா கிடி உத்தித: மே
நாஸாபுடாத் கிமுபவேத் அஜிதஸ்ய மாயா
இத்தம் விசிந்தயதி தாதரி சைலமாத்ர:
ஸத்யோ பவந் கில ஜகர்ஜித கோர கோரம்
பொருள்: குருவாயூரப்பனே! என்னுடைய மூக்கில் இருந்து வெளிப்பட்டதும், மிகுந்த திறமையும் மகிமையும் உடையதாகவும் காணப்படும் இந்தப் பன்றி யார்? யாராலும் வெற்றி பெற முடியாத விஷ்ணுவின் லீலையா இது? என்று ப்ரும்மா தன் மனதில் சிந்தித்தான். அப்போது நீ ஒரு பெரிய மலை அளவிற்கு வளர்ந்து மிகவும் பயங்கரமாகக் கர்ஜனை செய்தாய் அல்லவா?
6. தம் தே நிதாதம உபகர்ண்ய ஜநஸ்தப: ஸ்தா:
ஸத்ய ஸ்திதாச்ச முனயோ நுநுபு: பவந்தம்
தத் ஸ்தோத்ர ஹர்ஷுலமநா: பரிணத்ய பூய:
தோயாசயம் விபுலமூர்த்தி: அவாதர: த்வம்
பொருள்: ஸ்ரீ அப்பனே! இப்படியான உனது கர்ஜனையைக் கேட்ட ஜனலோகம், தபோலோகம், ஸத்யலோகம் ஆகியவற்றில் உள்ள முனிவர்கள் உன்னை த்யானித்து வணங்கினர். நீ அவர்களுடைய த்யானத்தினால் மனம் மகிழ்வு கொண்டாய். அதனால் மேலும் பெரிதாக வளர்ந்து கர்ஜனை செய்து கொண்டே கடலில் இறங்கினாய் அல்லவா? என்றார் பட்டத்ரி. ஸ்ரீ அப்பன் ஆம் என்று தலையசைத்தான்.
7. ஊர்த்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூதரோமா
ப்ரோக்ஷிப்த வாலதி: அவாங்முக கோர கோண:
தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ண தக்ஷ்ணா
ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந் அவதேரித த்வம்
பொருள்: குருவாயூரப்பனே! நீ அப்போது எப்படி இருந்தாய்? உனது ரோமங்கள் மேல் நோக்கியும், கறுப்பும் சிவப்புமாகவும், அசையும்படியும் இருந்தன. உனது வால் உயரமாகத் தூக்கி இருந்தது. உனது மூக்கு கீழாக நோக்கியபடி பயங்கரமான தோற்றத்துடன் காணப்பட்டது. மேகக் கூட்டத்தை நீ பிளந்தாய். உன்னைத் துதித்துக் கொண்டிருந்த முனிவர்களை உனது திருக்கண் பார்வையால் குளிரச்செய்து சமுத்திரத்தில் இறக்கினாய் அல்லவா? (இங்கு கூறப்பட்ட வராஹ மூர்த்தியின் தோற்றத்தை குருவாயூரப்பன், நாராயண பட்டத்ரிக்கு நேரிலே செய்து காண்பித்ததாகவே நம்பப்படுகிறது).
8. அந்தர்ஜலம் ததனு ஸங்குல நக்ர சக்ரம்
ப்ராம்யத் திமிங்கல குலம் கலுஷோர் மிமாலம்
ஆவிச்ய பீஷணரவேண ரஸாதலஸ்தான்
ஆகம்பயன் வஸுமதீம் அகவேஷய: த்வம்
பொருள்: குருவாயூரப்பனே! நீ இறங்கிய கடல் எப்படி இருந்தது? முதலைக் கூட்டங்கள் நிரம்பியதும், எங்கும் சுற்றுகின்ற திமிங்கலக் கூட்டம் உடையதாகவும், மிகப் பெரிய அலைகள் உடையதாகவும், கலங்கியதாகவும் அந்தக் கடல் இருந்தது. நீ உள்ளே சென்று எழுப்பிய கர்ஜனையால் ரஸாதல லோகம் கூட நடுங்கியது. இப்படியாகச் சென்று நீ பூதேவியைத் தேடினாய் அல்லவா? என்றார் பட்டத்ரி. ஸ்ரீஅப்பன் ஆம் என்றான்.
9. த்ருஷ்ட்வாத தைத்ய ஹதகேந ரஸாதலாந்தே
ஸம்வேசிதாம் ஜடிதி கூடகிடி: விபோ த்வம்
ஆபாதுகாந் அவிகணய்ய ஸுராரிகேடான்
தம்ஷ்ட்ராங்குரேண வஸுதாம் அததா: ஸலீலம்
பொருள்: எங்கும் உள்ளவனே (விபோ)! குருவாயூரப்பனே! பின்னர் மிகக்கொடிய அசுரன் ஹிரண்யாக்ஷனால் ரஸாதலத்தின் நடுவில் (சமுத்திரம் என்று கொள்ளலாம்) பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த பூமியை நீ கண்டாய். வராஹமூர்த்தியான நீ உன்னை எதிர்த்து வரும் அசுரர்களைக் கண்டு, அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், உனது கோரைப் பற்களால் பூமியை விளையாடுவது போன்று (அலட்சியமாக) குத்தி எடுத்தாய் அல்லவா? என்றார் பட்டத்ரி. ஸ்ரீஅப்பன் ஆம் என்றான்.
10. அப்யுத்தரந் அத தராம் தசனாக்ரலக்ந
முஸ்தாங்குராங்கித இவ அதிகபீவராத்மா
உத்தூத கோரஸிலிலாத் ஜலதே: உதஞ்சன்
க்ரீடா வராஹ வபு; ஈச்வர: பாஹி ரோகாத்
பொருள்: உனது விருப்பத்தினால் வராஹ உருவம் எடுத்தவனே? குருவாயூரப்பனே! கோரைப் பற்களின் நுனியில் கிழங்கு போன்று பூமியைக் கொண்டவனும், மிகவும் பெரிய உடலைக் கொண்டவனும், (அதிக பீவராத்மா), கலங்கியதும் பெரிய அலைகள் வீசுவதும் ஆகிய சமுத்திரத்தில் இருந்து வெளிவந்தவனும் ஆகிய நீ பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.