பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
1. த்வத் வபு: நவ கலாய கோமலம்
ப்ரேம தோஹநம் அசேஷ மோஹநம்
ப்ரஹ்ம தத்வ பர சித் முதாத்மகம்
வீக்ஷ்ய ஸம்முமுஹு: அந்வஹம் ஸ்த்ரிய:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய திருமேனி புதிதாக மலர்ந்த காயாம்பூ போன்று அழகாக இருந்தது. அது அனைவரையும் மயக்கியது. உன்னிடத்தில் அன்பைப் பெருக்கியது. ஸத் சித் ஆனந்தம் ஆகிய மூன்று இணைந்தது போல் காணப்பட்டது. இப்படிப்பட்ட பரப்ரஹ்மமான உனது உருவத்தைக் கண்ட கோபஸ்திரீகள் ஒவ்வொரு நாளும் தங்கள் மனதை உன்னிடம் பறிகொடுத்தனர்.
2. மந்மத உந்மதித மாநஸா: க்ரமாத்
த்வத் விலோகந ரதா: தத: தத:
கோபிகா: தவ ந ஸேஹிரே ஹரே
காநந உபகதிம் அபி அஹ: முகே
பொருள்: குருவாயூரப்பா! ஹரியே! ஒவ்வொரு நாளும் மன்மதனால் தங்கள் மனம் கலைக்கப்பட்டவர்களாக ஆனார்கள் (கோபியர்கள்). இதனால் அவர்கள் எப்போதும் எங்கும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்க விரும்பினார்கள். இதனால் நீ காலை வேளைகளில் காட்டிற்குச் செல்வத்தையும் அவர்கள் விரும்பவில்லை அல்லவா?
3. நிர்கதே பவதி தத்த த்ருஷ்டய:
த்வத் கதேந மநஸா ம்ருக ஈக்ஷணா:
வேணு நாதம் உபகர்ண்ய தூரத:
த்வத் விலாஸ கதயா அபிரேமிரே
பொருள்: குருவாயூரப்பா! மான் போன்ற அழகிய விழிகளை உடைய கோபிகைகள், நீ காட்டிற்குச் சென்றதும், உன் மீது மனதை உடையவர்களாக, நீ சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது வெகு தூரத்தில் கேட்கும் உனது புல்லாங்குழலின் இனிமையான இசையைக் கேட்டவுடன், உனது லீலைகளைப் பற்றிப் பேசி மகிழ்ந்தனர்.
4. காநந அந்தம் இதவாந் பவாந அபி
ஸ்நிக்த பாதப தலே மநோரமே
வ்யத்யய ஆகலித பாதம் ஆஸ்தித:
ப்ரத்ய பூரயத வேணு நாலிகாம்
பொருள்: குருவாயூரப்பா! காட்டிற்குள் சென்ற நீ, குளிர்ந்த நிழல் உடைய ஒரு மரத்தின் அடியில் நின்றாய். அங்கு உனது கால்களை மாற்றி குறுக்காக வைத்துக் கொண்டு, இனிமையான புல்லாங்குழல் ஓசையை எழுப்பினாய் அல்லவா?
5. மார பாண துத கேசரீ குலம்
நிர்விகார பசு பக்ஷி மண்டலம்
த்ராவணம் ச த்ருஷதாம் அபி ப்ரபோ
தாவகம் வ்யஜநி வேணு கூஜிதம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இனிமையான இசை, வானில் உள்ள தேலோகப் பெண்களையும் காமனின் பாணத்தால் துளைத்தது. பசுக்களும், பறவைகளும் அதனைக் கேட்டு அசையாமல் நின்றன. கற்களைக் கூட அந்த ஒலி கரைத்தது.
6. வேணு ரந்த்ர தரல அங்குலீ
தாள ஸஞ்சலித பாத பல்லவம்
தத் ஸ்திதம் தவ பரோக்ஷம் அபி அஹோ
ஸம்விசிந்த்ய முமுஹு: வ்ரஜ அங்கநா:
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய அழகான விரல் நுனிகள் அந்தப் புல்லாங்குழலின் துளைகள் மீது அசைந்து விளையாடின. உனது அழகிய பாதங்கள் அந்தத் தளத்திற்கு ஏற்றாற்போல் மெதுவாக அசைந்தன. இத்தகைய காட்சியை அந்தக் கோபிகைகள் காணவில்லை. இருந்தாலும் தங்கள் மனக்கண்களால் இந்தக் காட்சியை எண்ணி ஆனந்தக் கண்ணீர் விட்டு மயங்கினர். என்ன வியப்பு!
7. நிர்விசங்க பவத் அங்க தர்சிநீ:
கேசரீ: கக ம்ருகாந் பசூந் அபி
த்வத் பத ப்ரணயி காநநம் ச தா:
தந்ய தந்யம் இதி நநு அமாநயந்
பொருள்: குருவாயூரப்பா! உனது எழில் பொங்கும் திருமேனியை இப்படியாக எந்தவித தடையும் இன்றி தேவலோகப் பெண்களும், பறவைகளும், பசுக்களும் கண்டனர். உனது பாதங்களை அந்தப் ப்ருந்தாவனம் அன்புடன் நட்பு கொண்டது. இப்படிப்பட்ட இவர்கள் அனைவரும் மிகவும் பாக்கியசாலிகள் என்று கோபிகைகள் எண்ணினர் அல்லவா?
8. ஆபிபேயம் அதர அம்ருதம் கதா
பேணு பக்த ரஸ சேஷம் ஏகதா
தூரத: பத க்ருதம் தூராசய இதி
ஆகுலா: முஹு: இமா: ஸமாமுஹந்
பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய புல்லாங்குழலானது உனது வாயில் உள்ள அமிர்தத்தை உண்டது. அந்தப் புல்லாங்குழல் உண்டது போக மீதம் உன் வாயில் உள்ள சொற்ப அமிர்தத்தையாவது நாங்கள் அனுபவிப்போமா? நாங்கள் வெகு தொலைவில் அல்லவா உள்ளோம்? இது என்ன பேராசை! என்று எண்ணி கோபிகைகள் மயக்கம் உற்றனர்.
9. ப்ரத்யஹம் ச புந: இத்தம் அங்கநா:
சித்த யோநி ஜநிதாத் அநுக்ரஹாத்
பத்த ராக விவசா: த்வயி ப்ரபோ
நித்யம் ஆபு; இஹ க்ருத்ய மூடதாம்
பொருள்: ப்ரபுவே! குருவாயூரப்பா! இப்படியாக அந்தக் கோபிகைகளுக்கு மன்மதன் கருணை புரிந்தான். இதனால் அவர்கள் உன் மீது மேலும் மேலும் காதல் கொண்டனர். அதனால் அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களையும் மறந்து நின்றனர். அல்லவா?
10. ராக: தாவத் ஜாயதே ஹி ஸ்வபாவாந்
மோக்ஷ உபாய: யத்நத: ஸ்யாத் ந வாஸ்யாத்
தாஸாம் து ஏகம் தத் த்வயம் லப்தம் ஆஸீத்
பாக்யம் பாக்யம் பாஹிமாம் மாருத ஈச
பொருள்: ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இந்த உலகில் உள்ள அனைவருக்கும் காதல் என்பது இயற்கையாகவே உண்டாகிறது. மோட்ச உபாயம் என்பது சிலருக்கு முயற்சியினால் அமையும், அமையாமலும் போகலாம் ஆனால் கோபிகைகளுக்கு இரண்டும் ஒன்றாக அமைந்தது. (அவர்கள் க்ருஷ்ணன் மீது கொண்ட காதலே மோட்ச உபாயம் ஆனது). இது பெரும் பாக்கியம், பாக்கியம்! இப்படி அவர்களுக்கு அருளிய நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.