எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட நரசிம்மர் கோயில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ள மேலமாட வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் ஏற்ற செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகிறது. பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணெய் கொண்டு வந்து, ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, தேங்காய் உடைத்து வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷமும், அதனால் ஏற்பட்ட திருமணத்தடையும் விலகுவதாக நம்பிக்கை. கடன் பிரச்சனை, வழக்கில் வெற்றி பெற, வீடு, நிலப் பிரச்னை தீர, வியாபாரம் பெருக, சர்க்கரையும் எலுமிச்சைசாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர். இங்கு பெருமாளின் இடது மடியில் மகாலட்சுமி தாயார், அமர்ந்து காட்சி தருகிறாள். தாயாரின் பார்வை பெருமாளை நோக்கியிருக்கிறது. பக்தர்களின் குறைகளை உடனே தீர்க்கும்படி, தாயார் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டிருக்கும் வகையில் அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். நரசிம்மர் என்றழைக்கப்பட்டாலும், இவருக்குச் சிங்க முகம் கிடையாது. இந்தப் பெருமாளை பிரகலாத வரதன் என்றும் அழைப்பர்.