பதிவு செய்த நாள்
14
ஜன
2016
12:01
மதுரை: மதுரை சத்குரு சங்கீத சமாஜம் 64வது ஆண்டு இசை விழாவின் நிறைவு நாளான நேற்று, சந்தீப் நாராயணன் குழுவினரின் கர்நாடக சங்கீத கச்சேரி நடந்தது. தொடக்கமாக, ஒன்பது ராகங்களின் அமைந்த நவராகமாலிகா, வர்ணம் - ஆதி தாளத்தில் விறுவிறுப்பாக அமைய, வர்ணத்தின் சரணஸ்வரங்களை நேர்த்தியாக பாடினார் சந்தீப். அடுத்து ஆனந்த பைரவி ராகத்தில் குருபரா என்று துவங்கும் பாடலும், காற்றில் கலந்து ரசிகர்களை மகிழ்வித்தது. அடுத்ததாக, சஹானா ராக ஆலாபனை பாவபூர்வமாக சந்தீப் பாட, வயலின் வாசித்த ஸ்ரீகாந்த், ராகத்தை மெருகூட்டினார். நாதஜோதி முத்துசாமி தீட்சிதர் இயற்றிய மாயூவரம் தலக்கீர்த்தனை - அபயாம்பாயாம் பக்திம் என்று துவங்கும் பாடல் அற்புதமான பொருள் நலன் உடையது. சந்தீப் தானும் அனுபவித்து பாடி, கேட்பவரையும் இசையை உணர வைத்தார் என்றே சொல்ல வேண்டும். மிருதங்கம் வாசித்த கணபதிராமன், கண... கண... என்று வாசித்து கைதட்டலைப் பெற்றார். தொடர்ந்து சியாமா சாஸ்திரி இயற்றிய சாவேரி ராக கீர்த்தனை சங்கரி சம்குரு என்று துவங்கும் அம்பாள் துதி நெகிழ வைத்தது. அடுத்ததாக தஞ்சாவூர் சங்கரய்யரின் அபூர்வமான இசைப்பாடல், பாலசுப்பிரமணியம் பாதமே துணை என்று தொடங்கும், ஆதிதாள கீர்த்தனையை கேட்பதற்கு சுகானுபவமாக இருந்தது. தொடர்ந்து கீரவாணி ராக ஆலாபனையை சந்தீப் நிறைவுடன் செய்தார்.