பதிவு செய்த நாள்
14
ஜன
2016
12:01
சபரிமலை;சபரிமலையில் இன்று இரவு நடை அடைக்கப்பட்ட பின் 18ம் படியேறவும், நாளை பிற்பகல் 12 மணிக்கு பின் மலையேறவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, என கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார். மகரவிளக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் அவர் கூறியதாவது: சன்னிதானம், பம்பை, புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருந்துபாறை பகுதிகளில் ௮,௦௦௦ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாளை பிற்பகல் 12 மணி முதல் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதி இல்லை. மதியம் ௧ மணிக்கு உச்சபூஜை முடிந்த பின், பக்தர்கள் 18-ம் படியேற முடியாது. திருஆபரணம் வந்து தீபாராதனைக்கு பின் 18-ம் படியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்லலாம்.இன்று (ஜன.,14) இரவு 11.30 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின், பக்தர்கள் 18-ம் படியேற முடியாது. நாளை (ஜன.,௧௫) அதிகாலையில் மகர சங்கரம பூஜைக்காக, ௧ மணிக்கு நடை திறப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பம்பை ஹில்டாப், புல்மேடு பகுதிகளில் விபத்துகளை தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. புல்மேட்டில் அஸ்கா என்ற அவசர கால விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கு தரிசனம் முடிந்து, புல்மேட்டில் இருந்து பக்தர்கள் திரும்பி செல்ல கோழிக்கானம் முதல் குமுளி வரை சர்குலர் பஸ் விடப்படும். இப்பாதையில் போலீஸ் வயர்லெஸ் வசதியுடன் கூடிய மீட்பு வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும். மகரஜோதி தரிசனம் முடிந்ததும், பம்பையில் இருந்து பக்தர்களை விரைவாக நிலக்கல்லில் சேர்க்க, கேரள அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். சன்னிதானத்தில் இருந்து பக்தர்கள் வெளியேறுவதை பொறுத்து, பம்பையில் இருந்து இரவு ௭ மணிக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். காடுகளுக்குள் நிற்கும் பக்தர்களுக்காக, பாம்புகடி முதலுதவி மருந்துடன் தனிப்படையினர் பணியில் இருப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.