சேலம்: சேலம் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள, சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நாட்டுநல பணித்திட்ட மாணவ மாணவியர், வாழப்பாடி தாலுகா, பேளூர் தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரியை சேர்ந்த, 100 நாட்டுநல பணித்திட்ட மாணவ, மாணவியர் இப்பணிகளில் தங்களை அர்ப்பணித்து கொண்டனர். கோவிலை சுற்றி உள்ள இடங்களில் தூய்மைப்படுத்தி சுகாதாரமாக இருக்க பிளீச்சிங் பவுடரை தூவினர். மேலும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பேளூர் பேரூராட்சி சேர்மன் ராஜா என்ற ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கரன், ஆறுமுகம் மற்றும் கோவிலின் தலைமை பூசாரி ராமநாதன் குருக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் மற்றும் கல்லூரி நாட்டுநல பணித்திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் ஐயப்பன் ஆகியோர் செய்தனர்.