பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
ஈரோடு: மகாமக விழாவை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட, ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், 140 பேர் கும்பகோணம் செல்கின்றனர்.
கும்பகோணம் மகாமகம் விழா வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 22ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. விழாவுக்கு உள்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, கும்பகோணம் நகர பகுதியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஈரோடு மாநகராட்சியில் இருந்து முதல் கட்டமாக, இரண்டு துப்புரவு ஆய்வாளர்கள், நான்கு கண்காணிப்பாளர்கள் உட்பட, 70 பணியாளர்கள், இரண்டு பஸ்களில் கும்பகோணம் புறப்பட்டு சென்றனர். 10ம் தேதி முதல் 17ம் தேதி வரை இவர்கள் பணியாற்றி விட்டு திரும்பி விடுவர். 17ம் தேதி மீண்டும், மற்ற பகுதிகளை சேர்ந்த, 70 துப்புரவு பணியாளர்கள் செல்வர். அவர்கள் 27ம் தேதி வரை, அங்கு பணியாற்றி விட்டு ஈரோடு திரும்பி விடுவர். இத்தகவலை மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் இக்பால் கூறினார்.