பதிவு செய்த நாள்
19
பிப்
2016
11:02
ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வரும், 20ம் தேதி (நாளை) சனி பிரதோஷம் நடைபெற உள்ளது. சிவாலயங்களில், ஒவ்வொரு மாதம் அமாவாசை, பவுர்ணமி நாட்களுக்கு, இரு தினங்களுக்கு முன், திரயோதசி திதி நாட்களில், பிரதோஷ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மொத்தம், 25 பிரதோஷ தினங்கள் அனுஷ்டிக்கப்பட உள்ளன. இதில் ஐந்து சனி பிரதோஷ தினங்கள் வருகின்றன. கடந்த, 6ம் தேதி ஆண்டில் முதல் சனி பிரதோஷம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வரும், 20ம் தேதி மீண்டும் சனி பிரதோஷம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், வால்மீகிஸ்வரர், நந்திக்கு மாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதேபோல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகநாயகி உடனுறை பரதீஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான சிவாலயங்களில் சனி பிரதோஷம் நடைபெற உள்ளது.