பதிவு செய்த நாள்
19
பிப்
2016
11:02
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் உள்ள மகாமக கிணற்று தீர்த்தம் தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு தெளிக்க, நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இக்கோயிலில், மாசி தெப்பத்திருவிழா பிப்.,13ம் தேதி துவங்கியது. தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வருவார். நேற்று ஆண்டாள் சன்னதியில் சுவாமி மாலைமாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை சூர்ணாபிஷேகமும், இரவு தங்க தோளுக்கினியானில் திருவீதி நடைபெறும்.
நாளை குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கும். ஒன்பதாம் நாளான பிப்.21 அன்று காலை 7 மணிக்கு தங்க பல்லக்கில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் தெப்பமண்டபம் எழுந்தருள்வார். அதை தொடர்ந்து தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பிப்.22 அன்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க கருட சேவையும், திருவீதி உலாவும் நடக்கும். மகாமக தீர்த்தம்: அன்று காலை 5.45 மணிக்கு மகாமகத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் தென்கிழக்கே உள்ள மகாமக கிணற்றில்தீர்த்தவாரி நடைபெறும். அத்தீர்த்தம் தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு தெளிக்கப்படும். பின் காலை 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் தெப்பமண்டபத்திற்கு வருவார். பகல் 12 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு தெப்பம் இரு முறை வலம் வரும். பிப்.,23அன்று காலை தீர்த்தவாரி, இரவு ஆஸ்தானம் எழுந்தருளலுடன் மாசி தெப்பத்திருவிழா நிறைவு பெறும்.
விளக்கேற்ற புதிய வசதி: மாசி தெப்பத்திருவிழாவன்று, வரும் பக்தர்களில் பெண்கள், தெப்பத்தில் தீபம் ஏற்றி நேர்த்தி செலுத்துவர். பெண்கள் சிரமம் இன்றி தெப்பத்தில் விளக்கு ஏற்ற வசதியாக, பலகையால் ஆன இரண்டு அடுக்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பலகையில் பெண்கள் விளக்கு ஏற்றுமாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கின்றனர்.