பதிவு செய்த நாள்
11
மார்
2016
11:03
திருப்பூர்: கும்பாபிஷேகத்துக்கு, இன்னும் சில தினங்களே உள்ளன. சைவ, வைணவ ஒற்றுமைக்கு சான்றாக உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்கள், ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளன; தேர்த்திருவிழாவும், இரு கோவில்களிலும் ஒன்றாகவே நடத்தப்படுகிறது.பழைய திருப்பூர், இவ்விரு கோவில்களை சுற்றியே இருந்துள்ளது. இவ்வாலயங்களை சுற்றியே பழமையான டவுன் பள்ளி, பழைய மார்க்கெட் ஆகியவை உள்ளன. இவ்விரு கோவில்களுக்கும், ஏராளமான நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. பழைய ஆவணங்களை கொண்டு அவை மீட்கப்பட்டால், இவ்விரு கோவில்களுமே பல கோடி ரூபாய்களுக்கு சொந்தமாக மாறிவிடும்.கடந்த, 1761 முதல், 1767 வரை, மைசூரை தலைநகரமாக கொண்டு, ஹைதர் அலி ஆட்சி செய்தார். கொங்குநாடு, கொச்சி, பாலக்காடு உள்ளிட்டவை, அவரது குடையின் கீழ் இருந்தன. பின், 1782 முதல், 1799 வரை, திப்புசுல்தான் ஆட்சி நடைபெற்றது. அவரது ஆட்சியின் கீழ் பெரிய பரப்பளவை கொண்டிருந்ததால், இப்பகுதிகளுக்கென பிரத்யேக படைப்பிரிவுகள், குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையில் உருவானவையே,
சுல்தான்பேட்டை உள்ளிட்ட, பேட்டை என்ற பெயரில் முடியும் ஊர்கள்.முடியாட்சி நடந்தாலும், மக்களின் ஆதரவை பெறுவதற்காக, பல்வேறு வசதியை, அப்போதைய அரசர்கள் செய்து தந்துள்ளனர். தவிர, கோவில்களுக்கும் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர். அவ்வகையில், நமது ஈஸ்வரன் கோவிலுக்கும், பெருமாள் கோவிலுக்கும், மைசூர் அரசர்களால் ஏராளமான நிலம் வழங்கப்பட்டு, பின்னர் வந்த ஆங்கிலேய அரசால், அப்போதிருந்த, 29 இனாம் சாசனங்கள் அடிப்படையில், கோவில்களுக்கு <உரிமையாக்கப்பட்டுள்ளது.திருப்பூர் நகரில், 270.21 ஏக்கர்; வீரபாண்டியில், 62.32 ஏக்கர்; நல்லூரில், 12.82 ஏக்கர் என, மொத்தம், 345.35 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, அரசு மருத்துவமனை கட்டுவதற்கு, 1922ல், 7.92 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது; அதற்கு பதிலாக, சாமளாபுரம் கிராமத்தில், 27.66 ஏக்கர் நிலம், கோவிலுக்கு வழங்கப்பட்டது. இதுவே, தற்போது குளமாக உள்ளது.
இவ்வாறு, கோவில் நிலங்கள் நாளடைவில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாறி வந்துள்ளது. மேலும், இனாம் ஒழிப்பு சட்டம், தனியார் ஆக்கிரமிப்பு, விற்பனை போன்ற காரணங்களால், பல ஏக்கர் கோவில் நிலம் கைவிட்டு போயுள்ளன. மன்னர் காலத்தில் அதிகளவு நிலங்கள், பொன், பொருட்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதன் மூலம், இவ்விரு கோவில்களும், அக்காலத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்றிருந்ததை உணர முடிகிறது.