பதிவு செய்த நாள்
30
மார்
2016
12:03
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா, ஏப்., 17ல் காப்புகட்டுடன் துவங்குகிறது. ஏப்., 20 வரை தினமும் காலை, மாலை யாகபூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெருமாள் ஆடிவீதியில் வலம் வருகிறார். 21 காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 2 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, வேல், கம்பு, வளரி ஏந்தி ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். 22 காலை 9 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் புறப்பாடாகிறார். மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அன்று இரவு 10 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலுக்கு புறப்பாடாகிறார். 23 ம் தேதி சேஷ வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இரவு 10 மணி முதல் விடிய, விடிய தசாவதார சேவை நடக்கிறது. ஏப்., 26 ல் காலை மீண்டும் ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இருந்து புறப்பாடாகி திருக்கோயிலை அடைகிறார். அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.