பதிவு செய்த நாள்
01
ஏப்
2016
12:04
ஈரோடு: மாரியம்மன் கோவில் கம்பங்கள் செல்லும், வழித்தடப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம் திருவிழா நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி நாளை (2ம் தேதி) கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கம்பம் பிடுங்குதல்: நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பங்கள் பிடுங்கப்பட்டு, ப.செ.,பார்க் வழியே மணிகூண்டுக்கு எடுத்து வரப்படும். இதேபோல் பெரிய மாரியம்மன் கோவில் கம்பமும் இங்கு கொண்டு வரப்படும். வீதிகளில் ஊர்வலம்: இங்கிருந்து மூன்று கம்பங்களும் ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் ரவுண்டானா, சக்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணி கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம், மண்டபம் வீதி, கச்சேரி வீதி, நேதாஜி ரோடு, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வழியே அக்ரஹாரம் வீதி வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, காலிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். ஆலோசனை கூட்டம்: இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைதியான முறையிலும், குறித்த நேரத்தில் கம்பங்களை வாய்க்காலில் விடவும், தேவையான நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.