நபிகள் நாயகம் ஒருமுறை, தாயிப் நகரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தினர், இறைவன் உம்மை நபியாக அனுப்பியதாக கூறுகிறீரே! உம்மைத் தவிர அவருக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா?” என்று கேலி பேசினர். நாயகமோ அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பேசினார். ஆத்திரமடைந்த கூட்டத்தினர் அவர் மீது கல்லெறிந்தனர். அதையும் நாயகம் இன்முகத்துடன் பெற்றுக் கொண்டார். ஒரு கட்டத்தில் ரத்தம் அதிகமாக வெளியேறவே, அண்ணல் நாயகம் சோர்வடைந்து தரையில் அமர முயன்றார். அப்போது ஒரு கொடியவன் ஓடிவந்து அவரை அமர விடாமல் தடுத்து, துõக்கி நிறுத்தினான். நாயகம் அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போதும் கூட்டத்தினர், அவரைத் தடுத்து கல் வீசினார்கள். ஒரு வழியாக நாயகத்தின் நண்பரான ஸைத், அவரை நகருக்கு வெளியே அழைத்துச் சென்றார். நாயகம் வேதனை தாளாமல் அப்படியே சாய்ந்து விட்டார். உடனே ஸைத் அவரிடம், அண்ணலே! உங்களைக் கல்லால் அடித்த பாவிகளுக்கு சாபம் கொடுங்கள். அவர்கள் அழிந்து போகட்டும் என இறைவனை வேண்டுங்கள்,” என்றார். ஸைத்..அப்படி பேசாதீர்கள். நான் மக்களை சபிக்கவோ, அவர்களை அழிக்கவோ இந்த உலகத்திற்கு வரவில்லை. அவர்களது அறியாமையால் இத்தவறைச் செய்கிறார்கள். இப்போது இவர்கள் திருந்தாவிட்டாலும், இவர்களின் தலைமுறையாவது திருந்தும்,” என்றார் பெருந்தன்மையுடன்! பிறகு இறைவனை நோக்கி கையேந்தி, “இந்த மக்கள் அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்து விடு. உன்னைத் தவிர எனக்கு வேறு யாரும் பாதுகாவலாக இல்லை,” என்றார். நாயகத்தை போல, நமக்கும் பெருந்தன்மையும், பொறுமையும் இருக்க வேண்டும்.