பதிவு செய்த நாள்
08
செப்
2011
11:09
ஆழ்வார்குறிச்சி : கடையம் வில்வ வனநாதர், நித்திய கல்யாணி அம்பாள் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. கடையம் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வ வனநாதர் நித்திய கல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. தசரத சக்கரவர்த்தி தனது பாவ விமோச்சனத்திற்காக இங்கு வந்து வழிபட்டுள்ளார். மேலும் பாரதியார் கடையத்தில் வாழ்ந்த போது தினமும் இக்கோயிலுக்கு சென்று வழிபட்டு காணி நிலம் வேண்டும் பராசக்தி உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலில் தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார, தீபாராதனை நடந்தது. சுப்பிரமணிய பட்டர், கல்யாணசுந்தர பட்டர், குமார் பட்டர், சேரன்மகாதேவி ராஜ்பட்டர் ஆகியோர் நடத்தினர். பின்னர் சுவாமியும், அப்பாளும் தெப்பத்திற்கு எழுந்தருளினர். சுவாமியும், அம்பாளும் தெப்பக்குளத்தில் 11 சுற்று வீதிஉலா வந்தனர். சிறப்பு வானவேடிக்கையும் அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருக்கோயில் வீதி உலாவும் நடந்தது. ஓய்வு பெற்ற தாசில்தார் கல்யாணசுந்தரம் தேவாரப்பாடல்கள் பாடினார். இந்து அறநிலையத்துறை அம்பை ஆய்வாளர் சுப்புலட்சுமி, நிர்வாக அதிகாரி முருகன், ஆந்திரா சுவாமிகள் விஜேயகிருஷ்ணராவ், கடையம் பஞ்., தலைவர் சண்முகம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன், நல்லாசிரியர் மீனாட்சிசுந்தரம், ஸ்ரீநாத் ஏஜன்சி முருகேசன், அனுராதா முருகேசன், நடராஜ நாடார் பர்ம், கிரக லட்சுமி சீனிவாசன், வக்கீல் தயாள லட்சுமணன், கடையம் சார் பதிவாளர் முருகன், கடையம் பாரதி அரிமா சங்க தலைவர் முருகன், ஆலங்குளம் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., பிரதிநிதி மாரியப்பன், பத்திர எழுத்தர்கள் பால்சிங், டி.எஸ்.எம்.ரவீந்திரன், ஓய்வு பெற்ற தொழிலாளர் நல ஆய்வாளர் அம்பலவாணன், இருளப்ப பிள்ளை, கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் உட்பட கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பை டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம், கடையம் இன்ஸ்பெக்டர் சண்முகம் மேற்பார்வையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.