பதிவு செய்த நாள்
26
ஜூலை
2016
12:07
ஆர்.கே.பேட்டை;ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி, வரும், 31ம் தேதி வெள்ளாத்துாரம்மனுக்கு, 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட உள்ளது.ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில், வெள்ளாத்துார் மரபினரின் குல தெய்வமான வெள்ளாத்துாரம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீகாளிகாபுரம், வங்கனுார், ஆர்.கே.பேட்டை, சொரக்காய்பேட்டை, மத்துார், புச்சிரெட்டிபள்ளி மற்றும் ஆந்திர மாநிலம், புதுப்பேட்டை, சிந்தலபட்டடை, நாராயணவனம், கீழகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலில் நித்ய பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும், ஆடி மற்றும் தை மாதத்தில் திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆடி மாதத்தில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், குல தெய்வத்திற்கு ஒரே நாளில் பொங்கல் வைத்து, திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி, வரும், 31ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.