பதிவு செய்த நாள்
06
ஆக
2016
12:08
சென்னை: எட்டாவது இந்து ஆன்மிக சேவை கண்காட்சியின், மூன்றாம் நாளான (5.8.16) வெள்ளிக்கிழமை, "பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கன்யா வந்தனம் நிகழ்ச்சியில், 2,000 மாணவியர் நலங்கிட்டு பூஜிக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம், ஜெயின் கல்லுாரி வளாகத்தில், எட்டாவது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, 3ம் தேதி துவங்கியது; 8ம் தேதி வரை நடக்கிறது.
கன்யா வந்தனம்: தினமும், ஒரு கருத்தை முன்வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மூன்றாம் நாளான (5.8.16) வெள்ளிக்கிழமை, பெண்மையைப் போற்றுதல் என்ற தலைப்பில் கன்யா வந்தனம், சுவாசினி வந்தனம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கன்யா வந்தனம் நிகழ்ச்சிக்காக, சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 5ம் வகுப்பு வரை படிக்கும், 2,000 மாணவியர் வரவழைக்கப்பட்டனர். அனைவருக்கும் பாவாடை, சட்டை, வளையல் மற்றும் குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, மாணவர்கள் நலங்கிட்டு பூஜைகள் செய்தனர்.
அடுத்ததாக, வயது முதிர்ந்த பெண்களை போற்றும் சுவாசினி வந்தனம் நடந்தது. வயதான பெண்களுக்கு, இளைய தலைமுறையினர் பாத பூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில், லலிதா குமாரமங்கலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார்.
181 போட்டிகள்: இந்து ஆன்மிக கண்காட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள். ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட, 181 போட்டிகளில், 68 பள்ளிகளைச் சேர்ந்த 1,750 பேர் பங்கேற்றனர். ஆன்மிகம் என்ற பிரிவில் அவ்வையார் பாடல், பன்னிரு திருமுறை, திருவருட்பா, லலிதாம்பாள் ஷோபனம் ஒப்பிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்மையைப் போற்றுதல் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. (5.8.16) வெள்ளிக்கிழமை மாலை, பினேஷ் மகாதேவானந்த் மற்றும் குழுவினர் நடத்திய, ஆண்டாள் திருக்கல்யாணம் நாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.