பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
கிருஷ்ணகிரி: வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாத, மூன்றாவது வெள்ளிக்கிழமை என்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூக்கள் மற்றும் அனைத்து வகை பூஜை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. வழக்கமாக ஆடி மாதம் அடுத்தடுத்து வரும் பண்டிகையால், பூக்கள் விற்பனை அதிகரிப்பதோடு, விலையும் உயரும். இன்று (12ம் தேதி) வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி, மூன்றாவது வெள்ளி ஆகியவை சேர்ந்து வருகிறது. வரலட்சுமி நோன்பு பூஜைக்காக பூக்கள், பழங்கள் மற்றும் வாழைக் கன்றுகளை பெண்கள் பயன்படுத்துவர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இதன் விலை அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக குண்டு மல்லி மற்றும் முல்லை பூக்களின் விலை கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், நேற்று, 400 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் ஒரு கிலோ வாழைப்பழம், 80 ரூபாய்க்கும், ஒரு வெற்றிலை, இரண்டு ரூபாய்க்கும், ஒரு ஜோடி வாழைக்கன்று, 25 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு தாழம்பூ, 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகரித்திருந்தாலும், பூஜைக்காக பெண்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர்.