பதிவு செய்த நாள்
10
நவ
2016
03:11
சுதந்திரப் போர் நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஒரு மாலை நேரம். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி மாடியில் நின்று கொண்டிருந்தார் தமிழறிஞரான திரு.வி. கல்யாணசுந்தரனார். அப்போது ஆகாயத்தில் பறந்து வந்தார் ஒரு பெண்மணி. கணவனை இழந்தவரான அப்பெண்மணி, தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார். திரு.வி.க நின்றிருந்த மொட்டை மாடியில் தானும் இறங்கி நின்றார் அவர். தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பின் மீண்டும் வானில் பறந்து சென்று காட்சியிலிருந்து மறைந்து விட்டார்! திருவிக.வுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது! இக்காலத்தில் இப்படியும் நடக்குமா? திரு.வி.க அந்தப் பெண்மணி யார் எனப் பின்னர் விசாரித்தறிந்தார்.
அவர் சக்கரையம்மா என்ற பெண்சித்தர். சென்னையில் சிந்தாதிபேட்டை அருகே கோமளீஸ்வரன் பேட்டையில் வாழ்ந்தவர். பாரதியார் ஆங்கிலேய அரசு கைதுசெய்யும் என, பிரெஞ்ச் அரசாட்சி நடைபெற்ற பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தத் தப்பிப் போனாரே? அதற்கு பாரதியாருக்கு உதவிய மருத்துவர் நஞ்சுண்டராவின் குருதான் சக்கரையம்மா. இருபது வயதிலேயே கணவனை இழந்த அவரது இயற்பெயர் ஆனந்தாம்பா. கணவன் மறைவுக்கு பின் திருவண்ணாமலை அருகே போளூரில் அண்ணன் இல்லத்தில் சிறிதுகாலம் வசித்தார். அப்போது அங்கே அருகிலிருந்த நட்சத்திரக் குன்றில் நட்சத்திர குணாம்பா என்ற துறவியைச் சந்தித்தார். நட்சத்திர குணாம்பா, ஆனந்தாம்பாவை சிஷ்யையாக ஏற்றார். இறைச்சக்தியை தேவி வடிவில் மந்திர ரூபமாக வழிபடும் ஸ்ரீசக்ர உபாசனையைக் கற்பித்தார். அந்த உபாசனையை மேற்கொண்டதாலேயே பின்னால் ஆனந்தாம்பா ஸ்ரீசக்ர அம்மா என அழைக்கப்பட்டார். ஸ்ரீசக்ர அம்மா என்பதே நாளாவட்டத்தில் சக்கரையம்மா ஆயிற்று.
திரு.வி.க, தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஒரு மாது இருந்தார்கள். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும், அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை நான் வசித்த கல்லூரியின் (ராயப்பேட்டை வெஸ்லி கல்லூரி விடுதி) மாடியில் அவர் பறந்துவந்து நின்றார். மானுடம் பறக்கிறது என்றால் விந்தையல்லவா?