பதிவு செய்த நாள்
02
ஜன
2017
02:01
கோவை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி கோவில்களிலும், சர்ச்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஈச்சனாரியிலுள்ள விநாயகர் கோவிலில் உற்சவருக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சந்தன காப்பு செய்யப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. புலியகுளம் முந்திவிநாயகர் கோவிலில், சுவாமிக்கு எண்ணெய் காப்பு செய்து, மலர்மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பீளமேடு நவஇந்தியா; அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஈச்சனாரி மகாலட்சுமி மந்திர் கோவிலில், தங்கக்கிரீடம் தாங்கி, முப்பெரும் தேவியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராம்நகர் சத்திய மூர்த்திரோட்டிலுள்ள ஐயப்பபூஜா சங்கத்தில், புத்தாண்டையொட்டி நேற்று முன் தினம் இரவு, மஞ்சப்பாரா மோகன் குழுவினரின் திவ்ய நாம சிறப்பு இசைக்கச்சேரி நடந்தது.
கோவை வைசியாள் வீதியிலுள்ள வாசவிகன்னிகா பரமேஸ்வரி கோவில், கோனியம்மன் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், உக்கடம் நரசிம்மர் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பெரியகடைவீதியிலுள்ள புனித மைக்கேல் அதிதுாதர் பேராலயத்தில், புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு சிறப்பு ஆராதனை, திருப்பலி நடந்தது. காலை சிறப்பு திருவிருந்து மற்றும் ஞானஸ்தான நிகழ்வுகள் நடந்தன. வெள்ளலுார், சி.எஸ்.ஐ.யூனியன் சர்ச், போத்தனுார் கடைவீதியிலுள்ள புனிதசூசையப்பர் சர்ச், போத்தனுார் புனித மார்க் சர்ச், சுந்தராபுரம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், காந்திநகரிலுள்ள தமிழ் இவாஞ்சலின் லுத்ரன் சர்ச், மோகன் நகர் அருகே உள்ள டிரினிட்டி சர்ச் ஆகியவற்றில் நேற்று முன் தினம் இரவு சிறப்பு ஆராதனையும், திருப்பலியும், புத்தாண்டை வரவேற்கும் வகையில் திருவிருந்தும் நடந்தன. இதில், ஏரளாமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.