பதிவு செய்த நாள்
21
மார்
2017
12:03
சென்னிமலை: சென்னிமலை அருகே உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், ஊத்துக்குளி சாலையில், புஞ்சை பாலத்தொழுவு கிராமம் உள்ளது. இங்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஈஸ்வரன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்வதுபோல், இக்கோவிலில், பங்குனி மாத திங்கள்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. சென்னிமலை மட்டுமின்றி, சுற்று வட்டார கிராம மக்கள், காங்கேயம், திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பங்குனி மாத முதல் திங்கள்கிழமையான நேற்று, கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை, 2:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியது. பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில், பிரசாதமாக வெள்ளரிக்காய் வழங்கப்படுகிறது. அதை பக்தர்கள் ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.