ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட, ராமநாதபுரம் மீனாட்சி உடனுறை சொக்கநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அம்மன், சுவாமி அருள்பாலித்தனர்.
மே 1ல் நான்காம் திருவிழாவில் முருகனுக்கு சக்தி வேல் வழங்குதலும், அடுத்த நாள் திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல், மே 3ல் பிட்டுக்கு மண் சுமந்த காட்சியில் அருள் பாலித்தனர். அம்மன் தபசுகோலம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம் நடந்தது. பத்தாம் திருவிழாவில் மீனாட்சி சொக்கநாதருக்கு காலை 10:30 மேல் 11:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் தாலி கயறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. பெண்கள் அம்மனை வணங்கி தாலியை அணிந்து கொண்டனர். ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், தேவஸ்தான சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் கண்ணன் செய்திருந்தனர். ஆலய பூஜகர் மனோகர குருக்கள் பூஜைகளை செய்தார்.