பதிவு செய்த நாள்
28
அக்
2017
12:10
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோவிலில் நடக்கும் விழாவில், ஆராட்டுக்காக சுவாமி ஊர்வலம் செல்வதற்காக, ஐந்து மணி நேரத்துக்கு, திருவனந்தபுரத்தில் எந்த விமானமும் இயக்கப்படாது. உலகின், வேறெந்த விமான நிலையத்திலும் இல்லாத இந்த நடைமுறை, கேரளாவில் மட்டுமே உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் திருவனந்தபுரத்தில், புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மற்றும் ஐப்பசி மாதத்தில் நடக்கும் விழாவின் கடைசி நாளில், சுவாமிக்கு, ஆராட்டு எனப்படும், புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக, கோவிலில் இருந்து, அருகில் உள்ள சங்குமுக கடற்கரைக்கு, சுவாமி ஊர்வலமாக சென்று, அங்கு, ஆராட்டு நடக்கும். இந்த ஊர்வலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள, விமான ஓடுதள பாதை வழியாகவே செல்லும். காலங்காலமாக இந்த பழக்கம் உள்ளது. கடந்த, 1932ல், திருவனந்தபுரம் விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னும், இந்த ஊர்வலம், தொடர்ந்து அதே பாதையில் நடந்து வருகிறது. இதற்காக, ஆண்டில் இரு முறை, இந்த ஊர்வலம் நடக்கும் நேரத்தில், விமானங்கள் இயக்கப்படாது. இந்த ஆண்டுக்கான, ஐப்பசி மாத ஆராட்டு விழா, இன்று நடக்க உள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில், இன்று மாலை, 4:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, எந்த விமானமும் இயக்கப்படாது.