நியூ சவுத்வேல்ஸ் தலைநகரம் சிட்னி. இங்கு மோஹில் என்ற பகுதியில் குன்றின் மீது முருகன் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனை, ‘வைகாசி குன்று ’ என சிறப்பு பெயரிட்டு அழைக்கின்றனர் இப்பகுதி மக்கள். இவருக்கு, ‘சிட்னி முருகன் ’ என்ற செல்லப் பெயரும் உண்டு. இக்கோயில் கட்டும் பணியைத் துவக்கியவர் இலங்கைத் தமிழர் சிவஜோதி தனிக் ஸ்கந்தகுமார், இவர் ஆஸ்திரேலியாவுக்கு வரும்போதே தம்முடன் பஞ்சலோகத்தால் ஆன முருகன் சிலையையும் எடுத்து வந்தாராம். ஜாப்னாவிலிருந்து 1983ல் எடுத்து வரப்பட்ட இச்சிலை முதலில், வீட்டில் வைத்தே வழிபடப்பட்டு வந்தது. அடுத்து, ஒரு பெண்கள் பள்ளியில் வைத்து வழிபடப்பட்டது. பிறகு. சிட்னியின் மேற்குப் பகுதியில் கோயிலுக்காக நிலம் வாங்கி, கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூன்று நிலைகளைக் கொண்ட இக்கோயில் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்து, மிகப் பெரிய ஹாலை நோக்கி நடந்தால் வழியில் துவஜஸ்தம்பம், ஹாலின் மையப்பகுதியில் கர்ப்ப கிரகம் மற்றும் சன்னிதிகள், கருவறையின் மையப் பகுதியில் முருகப்பெருமான் வள்ளி - தேவசேனாவுடன் வீற்றிருக்க, இருபுறமும் சிவன் மற்றும் அம்பை! செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் தமிழர்கள் இங்கு கூடுவதால், சிறப்பு கேண்டின் திறக்கப்பட்டு. மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை: நடைபெறுகிறது. கோயில் நடை காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்துள்ளது. தமிழர்கள் இக்கோயில்களில், தங்களது குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பொது கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். சங்கராந்தி, தமிழ் புது வருடம், சிவராத்திரி, கந்த சஷ்டி ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.