தைப்பூசத்திருவிழா, ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் பிரசித்தி பெற்ற விழாவாக உள்ளது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை (பார்வதி) கைலாசநாதருடன் (சிவன்) தனிக்கோயிலில் அருள்பாலிக்கிறாள். இவர்களது சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது.
தகப்பனை வழிபடவந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை முக்கிய தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். மலைக்கோயில் முருகன் பிரபலமாகவே, முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்து விட்டது. ஆனாலும், பழமை மாறாமல் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. தைப்பூசக் கொடியேற்றம் இங்கு தான் நடக்கும். விழாவின் போது, இக் கோயிலில் உற்சவர் முத்துக் குமாரசுவாமி (முருகன்) தினமும் எழுந்தருளுவார். விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு வீதியுலா செல்கிறது. தொழிலதிபர்கள், தங்கள் பங்குதாரராக பழநி முருகனை கருதி, லாபத்தில் ஒரு பங்கை முருகனுக்கு தந்து விடுகின்றனர்.