பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா, கடந்த 13 ம் தேதி துவங்கியது. தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, கோவிலை சுற்றி திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை, மணிமுக்தா ஆற்றில் மயானகொள்ளை உற்சவம் நடந்தது. நேற்று திருத்தேர் வைபவத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு தீபமேற்றி நேர்த்தி கடன் செலுத்தினர். சக்தி அழைப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளினார். மாலை 4:40 மணிக்கு எம்.எல்.ஏ., பிரபு வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயச்சந்திரன், கோவிந்தராஜ், முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.