ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு நித்யபிரதோஷம் என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.