பதிவு செய்த நாள்
05
அக்
2018
12:10
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், குருப்பெயர்ச்சியை ஒட்டி, 8 அடி உயரத்தில், சந்தன அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில், தட்சணாமூர்த்தி – கவுரி தம்பதி சமேதரராக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். நேற்று, குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி, நேற்று, காலை, 5:00 மணிக்கு, தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பரிகார சங்கல்பம் நடந்தது. காலை, குரு பகவான் 8 அடி உயரத்தில் குருபகவான் ஆவாஹனம் செய்யப்பட்டது. நவகிரக ேஹாமம், நவக்கிரக அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, குருசாந்தி ஹோமம், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோவிலில், குருபகவானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பரிகார சங்கல்பம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல், ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகா சமதே ஸ்ரீபரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் மற்றும் பெரும்பாலான கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது.