சென்னையில் எழுத்தாளர்கள் கூட்டத்திற்கான ஏற்பாட்டில் மும்முரமாக இருந்த எழுத்தாள நண்பரைப் பார்க்கப் போனேன்.
“கூட்டத்துக்கு யார் வரப் போறாங்கன்னு பட்டியல் தயாரிச்சிட்டோம்... பாரேன்.”
பார்த்தேன். என் பெயரைக் காணோம். கோபத்தில் கத்தினேன். “யதார்த்தத்தை புரிஞ்சிக்கங்க வரலொட்டி. நடக்கப்போறது எழுத்தாளர் கூட்டம். நாங்க பின்நவீனத்துவம், வாழ்வியல் பரிமாணங்கள்னு ஆழமான விஷயங்களை அலசப் போறோம். அங்க வந்து ’ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா’ன்னு கதை சொல்லிட்டு இருப்பீங்களா?”
ஒருவரை ஒதுக்குவது தான் உச்சகட்ட அவமானம். நண்பரைக் கோபித்தபடி நேராக கோயிலுக்கு ஓடினேன். பச்சைப்புடவைக்காரியிடம் அழுதேன்.
கோயிலுக்கு வெளியே சாலையைக் கடக்கும்போது இளம்பெண் ஒருத்தி கைகளைப் பற்றினாள்.
ஆமாம், அவள் பச்சைப்புடவைக்காரி தான்.
“நீ எழுத்தாளர் இல்லையாமே? வெறும் கதை சொல்லியாமே?” என்று சிரித்தாள் அவள்.
“ஏன் தாயே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறீர்கள்?”
“முட்டாள். அவனுக்குத் தான் அறிவில்லை என்றால் உனக்கு எங்கே போச்சு அறிவு? கூட்டத்திற்கு போக நீ ஆசைப்பட்டிருக்க கூடாது. ஏனெனில் நீ எழுத்தாளனே இல்லை வெறும் கதைசொல்லிதான்.”
“தாயே!”
“ஏன் பதறுகிறாய்? கதைசொல்லி என்றால் இளக்காரமான விஷயமில்லை. கதை சொல்வது, கேட்பது, புனைவது என்பது மானுடத்தின் அதிமுக்கியத் தேவை. குழப்பமான இந்த உலகில் ஒழுங்கு ஏற்பட வேண்டும் என்றால் கதை சொல்லுதல் அவசியம். வாழ்க்கை நம்மைத் தூக்கியடிக்கும்போது அதற்கு ஒரு கதையை மனதில் உருவாக்கிக் கொண்டால் தான் நம்மால் மீண்டும் எழ முடியும். இந்தக் கற்பிதம் உண்மையா, பொய்யா என்பதல்ல... இது நம்மை வாழ வைக்குமா வைக்காதா என்பது தான் கேள்வி. கதைகள் பலரைப் பல சமயங்களில் வாழ வைத்திருக்கிறது. வீர சிவாஜி தன் தாயிடம் கதை கேட்டதால் வல்லமை மிக்க அரசனாக வளர்ந்தார்.”
“தாயே நீங்கள் சொல்வது புரிந்தும் புரியாதது போலிருக்கிறது..”” கதை என்பது வெறும் கற்பனையல்ல. ஒரு மனிதன் எதையாவது இழக்கும் போது எப்படியாவது தன்னைத் தானே தேற்ற முயல்கிறான். இழப்பை மையமிட்டு ஒரு கதையை உருவாக்குகிறான்.”
“ஏதாவது ஒரு உதாரணம் சொன்னால் புரியும்.”
அங்கே பார்.
எமிகோ நாகா ஒரு கால்பந்தாட்ட வீரர். அமெரிக்காவின் பெரிய கால்பந்தாட்ட அணியில் விளையாடியவர். எதிரணியினர் அவர் பக்கம் ஊடுருவாமல் தடுப்பதே அவரது வேலை.
தொடர்ந்து அவரது அணி வெற்றிகளைக் குவித்தது. புகழுடன், பெரும் பணம் சம்பாதித்தார்.
அப்போது 2009ம் ஆண்டு அமெரிக்காவின் ஆர்கான்சாஸ் மாநிலத்தில் எமிகோ மும்முரமாக ஆடிக்கொண்டிருந்தார். எதிரணி வீரரின் ஊடுருவலைத் தடுக்க அவர் மீது மோதினார் எமிகோ. மோதலின் வேகத்தில் கீழே விழுந்தார். விளையாட்டில் இது சாதாரண நிகழ்வு என்றாலும் அந்த முறை சற்று வித்தியாசமாக உணர்ந்தார். எழ முடியவில்லை. பார்வையாளர் கூட்டம் அதிர்ச்சியடைந்தது. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் பயிற்சியாளர்கள். கழுத்துப்பகுதியில் ஒன்பது மணி நேரம் தொடர் அறுவை சிகிச்சை நடந்தது. மயக்கம் தெளிந்து விழித்த போது நெஞ்சுக்குக் கீழே அவரால் அசைக்க முடியவில்லை.
எமிகோவின் வாழ்வில் இருந்து கால்பந்தாட்டத்தைப் பிரிக்க முடியாது. பள்ளிக்காலம் முதல் விளையாட்டின் மீது காதல் கொண்டவர். படிப்படியாக முன்னேறி அப்போது தான் மாநில அளவில் ஆடிக் கொண்டிருந்தார். தேசிய அளவில் பெரிய அணிகளிலிருந்து அழைப்பு வந்த காலகட்டம் அது. ஒரு வாரம் கழித்து நடக்கும் ஒரு நேர்காணலில் வெற்றி பெற்றால் அவர் வாழ்வே தலைகீழாகி விடும். முப்பது வயதில் அவர் கோடீஸ்வரராகியிருப்பார்.
அந்த நேர்காணலுக்கு முன் தான் விபத்து நிகழ்ந்தது. மூன்றாவது மாதம் மருத்துவமனையில் இருந்த எமிகோவை வீட்டுக்கு அனுப்பினர்.
அவரால் கை, கால்களை அசைக்கமுடியவில்லை. நுாறு கிலோ எடையைக் கூட எளிதாக தூக்கியவருக்கு பந்தைக் கூட துாக்க முடியவில்லை. எமிகோவின் தந்தை பணியிலிருந்து விலகி மகனுக்கு உதவி செய்ய வந்தார்.
விபத்திற்கு முன் எமிகோவின் வாழ்க்கைத் திட்டம் கச்சிதமாக இருந்தது. அவருடைய வருங்காலம் எப்படி இருக்கும் என துல்லியமாகக் கணித்திருந்தார். நாளெல்லாம் மனதிற்குப் பிடித்த விளையாட்டு. இரவில் கேளிக்கை, கொண்டாட்டம் எதிலும் எமிகோ தான் முன்னணியில் இருப்பார். எல்லாம் தலைகீழாகி கனவுகள் கலைந்தன.
“எமிகோவின் இடத்தில் மற்றவர்கள் தற்கொலை செய்திருப்பர். இந்த இடத்தில் தான் கதை சொல்லுதல் அவர் வாழ்வை மாற்றியது.”
“தாயே கதை சொல்லுதலுக்கு இங்கே என்ன வேலை?”
“ பொறுமையாக கேள். ”
“எனக்கு ஏன் அப்படி விபத்து நடக்க வேண்டும்? என எமிகோ சிந்தித்தார். ’நான் ஒரு எறும்புக்குக் கூடக் கெட்டது பண்ணலையே என்னை ஏன் ஆத்தா பாடுபடுத்தற?’ என சிலர் புலம்புவதுண்டு. விளையாட்டு, கேளிக்கை, கொண்டாட்டம், பணம், இன்பம் என ஏற்கனவே தன் கதையை எழுதி வைத்திருந்தார் எமிகோ. விதி அந்தப் பக்கங்களைச் சுக்குநுாறாகக் கிழித்துப் போட்டது.
இப்போது தான் வாழ்வின் அர்த்தத்தை தேட ஆரம்பித்தார். விபத்து பற்றியும் அதன் பின் தான் வாழப்போகும் வாழ்வு குறித்தும் ஒரு கோர்வையான கதையைப் பின்ன ஆரம்பித்தார்.
விபத்து நடக்கும் முன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாதவராக இருந்தார். விளையாட்டு, கேளிக்கை, இன்பம் எல்லாம் குறைவின்றி கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே அவரது வாழ்வின் கதைச் சுருக்கமாக இருந்தது.
விபத்துக்குப் பிறகு தான் எமிகோ தான் யார், எப்படிப்பட்டவன் என்பதைக் கண்டுபிடித்தார். அவரது வாழ்க்கைக் கதையைத் திருத்தியமைத்தார். மாணவர்களுக்கு வழிகாட்டும் பணியை விரும்பி ஏற்றார். தன் இனிய பேச்சால் அவர்களை நல்வழிப்படுத்தினார். தனக்கு நேர்ந்த விபத்தை பாடமாக எடுத்துச் சொன்னார். கல்லூரியில் சேர்ந்து கவுன்சலிங் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இன்று எமிகோவுக்கு கால்பந்தாட்டத்தை நினைக்க கூட முடியாத வாழ்க்கை. ஆனால் அதில் மனநிறைவு இருக்கிறது. அவர் கை, கால்கள் செயலற்று இருந்தாலும் எப்போதும் இல்லாத ஆன்மிக மலர்ச்சி முகத்தில் பளீரிடுகிறது.
அவர் சொல்வதைக் கேள்.
“விளையாட்டு, இன்பம், கேளிக்கை என தவறான மலையில் ஏறிக்கொண்டிருந்தேன். நல்ல வேளை இந்த விபத்து என்னை அந்த மலையிலிருந்து கீழே தள்ளி விட்டது. அடுத்தவருக்கு வழிகாட்டும் வாழ்க்கை எனக்குரிய மலை என விபத்து புரிய வைத்தது. எனக்குரிய சரியான மலையைக் கண்டுபிடித்து அதில் மெதுவாக ஏறிக் கொண்டிருக்கிறேன்.”
எமிகோவின் கதையைச் சொன்ன என் தாய் சொன்ன வார்த்தைகள் கேட்டு சிலிர்த்தேன்.
“அந்த வீரனுக்காக அவன் ஏறும் மலையின் உச்சியில் அன்புடன் காத்திருக்கிறேன்.
“ வாழ்க்கைக்கு இலக்கியம் அவசியம் தான்! ஆனால் கதைசொல்லிகள் அதை விட முக்கியம். அதனால் தான் ஆயிரமாயிரம் புராணம், இதிகாசங்கள் இருக்கின்றன.”
அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவள் மனதில்தான் எத்தனை அன்பு? தன் கடமையை கூட மறந்து எனக்கு விளக்கம் தருகிறாளே!
“ சரி உன் வாழ்க்கைக் கதையைக் கொஞ்சம் சொல்கிறாயா? ஆவலாக இருக்கிறேன். என்ன ஒரு இரண்டு மணி நேரமாகுமா?” “இல்லை...தாயே! ஐந்து நொடிகள் போதும்.”
“ என்ன சொல்கிறாய்?”
“பச்சைப்புடவைகாரியின் கொத்தடிமை இது கதைச்சுருக்கம் இல்லை தாயே. இதுவே என் மொத்தக் கதையும். அவள் விரும்புவதைச் செய்வதே இந்த அடிமை நாயின் மொத்த வாழ்க்கையும்.. இந்தக் கதைகூட நான் புனைந்ததல்ல...நீங்களே எழுதியது. அதன்படி வாழ அருள்புரிவாயம்மா”
ஏதோ நகைச்சுவைத் துணுக்கு கேட்டது போல் வாய்விட்டுச் சிரித்தாள். நான் அழ ஆரம்பித்தேன்.