இறைவன் விரும்புவது எல்லாம் அவனிடம் பக்தி செலுத்துவதே. ஆத்மார்த்த பக்திக்கு அவன் தனது இதயத்திலே உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்துவிடுகிறான். அப்படிப்பட்ட பக்தர்களை அதிலும் தன்னை அண்டியவர்களை, சரணாகதி செய்து தனது சுவாசமே அந்த பரமாத்மா என்று இருப்பவர்களை எந்த ஒரு தவறையும் செய்து விடாமல் காத்து ரக்ஷிக்கிறான். அவர்களுக்கு ஒரு போதும் ஆணவ வாசனை வராது அப்படி வந்துவிட்டால் அவரால் சகிக்க முடியாது. ஆகவே பரந்தாமானால் ஆதரிக்கப்பட்டவர்களுக்குத் தன் குணத்தில் கர்வம் உண்டானால், அந்த கர்வத்தை அடக்குவதற்காக ஏதேனும் ஒரு கெட்ட சம்பவம் நிச்சயம் நடக்கிறது. அதன் முடிவில் அவர்களின் கர்வம் தகர்த்தெறியப் பட்டு எம்பெருமானின் கருணைக்கு மீண்டும் ஆளாகிறார்கள்.
சத்தியபாமா : ஸ்ரீ கிருஷ்ணன் ருக்மணிக்கு ஒரே ஒரு பாரிஜாத மலரைக் கொடுக்க சத்தியபாமா, கிருஷ்ணனிடம் உமக்கு ருக்மணி மேல்தான் அன்பு என்று புலம்பி ஒரு வழியாக பாரிஜாத மரத்தையே இந்திர லோகத்திலிருந்து கொண்டு வரச் செய்தார். அதன் காரணமாக ருக்மணியை விட தான் அழகிலும் மற்றும் குணத்திலும் தானே உயர்ந்தவர் என்று ஒரு எண்ணம் வந்தது.
சுதர்சன சக்கரம்: எல்லா அவதாரங்களிலும் வெற்றியை நிச்சயம் செய்த காரணத்தால் தானே மற்றவர்களை காட்டிலும் வலிமையில் சிறந்தவர் என்று ஒரு சிறு கர்வம்.
கருடன் : வினைதையின் புதல்வனான கருடனுக்கு தன் சக்தியின் மீது ஒரு கர்வம். பகவானையே சுமந்து செல்லும் தானே மற்றவர்களை காட்டிலும் சிறந்தவன் என்று.
ஒருநாள் ஸ்ரீ கிருஷ்ணர் கருடனுக்கு ‘நீ கந்தமாதன மலைக்குச் சென்று ஸ்ரீ ஹனுமானை அழைத்து வா. அவரிடம் அவரது ஆராத்ய தேவன் (ஸ்ரீ ராமர்) அழைப்பதாக கூறு‘ என்று கட்டளையிட்டார்.
கருடன் சென்றதுமே சக்கரத்திற்கு ‘நீ வாயிலில் இரு. யாரையும் உள்ளே வர விடாதே‘ என்று கட்டளையிட்டார்.
சத்யபாமாவிடம், ‘மகாராணி ! நீ ஸ்ரீஜானகியின் உருவம் தாங்கி என்னருகே உட்காரவேண்டும். வாயு குமாரனை அழைத்து இருக்கிறேன். அவருக்கு முன்னால் நான் ஸ்ரீ ராமனின் உருவமாக தெரியவேண்டும் ‘ என்றார். ‘ நான் என்ன சீதாவை விட அழகில் குறைந்தவளா ? மிதிலா அல்லது அயோத்தி பெண்களைப் போல் ஆடையணிகளை மட்டும்தான் மாற்ற வேண்டும். இதோ இப்போதே செய்து கொள்கிறேன்‘ என்றார் சத்யபாமா. ‘ உனக்கு தெரியும். இருந்தாலும் நான் கவனப்படுத்தினேன், அவ்வளவுதான்‘ என்றார் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே. இதனிடையே கந்தமாதன மலையை அடைந்தார் கருடன். அங்கே ஹனுமான் ’ ரகுபதி ராகவ ராஜா ராம் ‘ எனும் கீர்த்தனையில் லயித்திருந்தார். கருடன் ஹனுமானை நோக்கி, ‘ தாங்கள் துவாராகாவிற்கு வாருங்கள்‘ என்றார்.
‘ ஏன் ‘ ? என்றார் ஹனுமான்.
‘தங்களது இஷ்ட தேவன் அழைத்திருக்கிறார்‘
‘ தாங்கள் செல்லுங்கள். நான் வருகிறேன்‘
‘ என் முதுகின் மீது அமருங்கள். கையேடு அழைத்து வரும் படி எனக்கு உத்தரவு‘
‘ எனக்கு வாகனம் தேவையில்லை. தாங்கள் செல்லலாம். தங்களுக்கு முன்னால் வந்து சேருவேன்‘ என்றார் ஹனுமான்.
‘தங்களுக்கு இந்த கருடனின் வேகத்தைப் பற்றி கற்பனை கூட கிடையாது. என் வேகம் தங்களின் தந்தை வாயுவின் வேகத்தை விட மிகத் தீவிரமானது. என் வேகத்திற்கோ மூவுலகிலும் இணையில்லை‘ என்று கருடன் கர்வத்துடன் கூறினார்.
‘ அவை எதையும் நான் அறியேன். ஆனால் நீங்கள் செல்லலாம் நான் வந்து கொண்டேயிருக்கிறேன்‘ என்றார் ஹனுமான்.
‘ நீங்கள் இப்போது வரவில்லைஎன்றால் தங்களை பலவந்தாமாகப் பிடித்துச் செல்ல வேண்டியிருக்கும். என் வேகத்தைப் போலவே என் சக்தியும் இணையற்றது. தேவ-அசுரர்கள் ஒன்று சேர்ந்தாலும் என் பராக்கிமத்திற்குச் சமமாக மாட்டார்கள் ‘ என்றார் கருடன் ஆணவமாக.
‘ நல்லது - அப்படியா விஷயம் ! ‘. உண்மையான சேவகன் தனது சுவாமியின் மனதை அறிபவனாகிறான். தனது குதூகல பிரபு கருடனை ஏன் தன்னிடம் அனுப்பியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள ஹனுமானுக்கு நேரமாகவில்லை. அவர் கருடனின் வாலைப் பிடித்தார், சுழற்றி அவரை வீசி எறிந்தார். வீசியெறியப்பட்ட கருடன் துவாராகாவிற்கு அருகே கடலில் சென்று விழுந்தார். வேகமாக வீசியெறியப்பட்டகாரணத்தால் கடலின் மிக ஆழமான பகுதிக்கு மூழ்கி சென்றார்.
ஸ்ரீ ஹனுமானும் துவாராகா செல்ல உயரே எழும்பினார். ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகைகளின் வெளி வாயிலில் வந்து இறங்கினார். வெளி வாயிலில் இருந்த சுதர்சன சக்கரம் ‘ யாருக்கும் உள்ளே செல்ல அனுமதியில்லை ‘ என்று அவரை தடுத்துவிட்டது.
‘ தசகண்ட ராவணனை வெல்ல அவதரித்த போது என்னிடம் திரேதா யுகத்திலேயே, அயோத்தி வந்ததும் எனது பிரபு, ‘ அன்பு ஹனும! உனக்கு அந்தப்புரத்தின் தனிமையில் வருவதற்குக் கூட எந்த சமயமும் எந்தத் தடையும் கிடையாது என்று கூறியிருக்கிறார் ‘ என்றார் ஹனுமான்.
‘திரேதாவில் எந்தக் குரங்கிற்காவது அளிக்கப்பட இந்த அனுமதியை ஒப்புக்கொள்ள என்னை வற்புறுத்த முடியாது ‘ என்ற சக்கரம் தீவிரமாக நெருப்பை உமிழத் தொடங்கியது.
ஹனுமான் கருடனை சந்தித்த போதே, தன் சுவாமி இன்று என்ன லீலையைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். பிறந்த உடனேயே புவன பாஸ்கரனை - சூரியனை வாயில் வைத்துக் கொண்ட அவருக்கு சக்ரத்தின் தேஜஸைப் பற்றி என்ன கவலை?‘ ஹனுமான் சக்ரத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு வலது கன்னத்தில் அடக்கிக் கொண்டார். நேரே தனது ஆராதனைக்கு உரிய சுவாமியை நோக்கி உள்ளே சென்றார்.
இரு கரங்களுடன் கோதண்டதாரியாகியிருந்த ஸ்ரீ கிருஷ்ணர் அரியணையில் அமர்ந்திருந்தார். எதிரே சென்ற ஹனுமான் தண்டனிட்டு வணங்கியதும், ஸ்ரீ கிருஷ்ணர் மிக அன்போடு அவரைத் தூக்கினார். அயோத்தி அரியணைக்கருகே உட்கார்ந்திருக்கிறாரோ என்று நினைக்கும்படி திருவடிகளுக்கருகே, பவ்யமாக கைகூப்பியபடி அந்த வாயு குமாரன் அமர்ந்தார். உட்கார்ந்ததுமே அவர் எதோ கூற வேண்டும் என்பதைப் போல தலை குனிந்தார்.
‘ என்ன கூறவேண்டும் அன்பனே‘ என்று மிக அன்போடு கேட்டார் ராமர் வடிவிலிருந்த ஸ்ரீ கிருஷ்ணர்.
‘இன்று தாயின் தரிசனம் கிடைக்கவில்லையே ! ‘ ஹனுமான் தலை குனிந்தபடியே ‘ பிரபு எல்லாம் வல்லவர், ஆனால் இன்று என் தாயின் இடத்தை எந்த அடியாளுக்கு அளித்து பேறு பெற வைத்துள்ளீர்கள் ‘ என்றார். அருகில் அமிர்ந்திருந்த சத்யபாமாவின் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது. அவர் அதே சமயம் எழுந்து உள்ளே ஓடிவிட்டார். அவர் தானாகவே ருக்மணியிடம் சென்று ‘ சகோதரி ! நீயே போ. அதோ உன் குரங்கு புதல்வன் வந்திருக்கிறான், அவன் மற்ற எல்லோரையும் பணியாளாகவே கருதுகிறான் ‘ என்று கூறி அழுதுவிட்டார்.
‘ ஆஹா ! ஹனுமான் வந்திருக்கிறானா ‘ என்ற ருக்மணி பாசத்தில் தன்னையே மறந்து விட்டார். அவர் அதனால் சத்யபாமாவின் கண்ணீரில் கவனம் செலுத்தவில்லை. அவர் இருந்த கோலத்திலேயே ஸ்ரீ துவாராகாதீசனிடம் வந்தார். அவர் வந்ததுமே ஹனுமான் எழுந்து அவரது பாத கமலங்களில் தலை வைத்து ‘அம்மா ‘என்றபடி வணங்கினார்.
நீ நன்றாக வந்தாய் ஹனுமான். உன்னை யாரும் தடுக்கவில்லையே ? ‘ என்று கேட்டார் துவாரிகாநாதன்.
ஸ்ரீ மாருதி சக்கரத்தை வாயிலிருந்து எடுத்து வெளியே விட்டு ‘ இந்த ஒரு பொம்மை வாயிலில் கிடைத்தது. தாங்கள் எனக்கு தங்களது திருவடிகளை அடையத் தடையில்லாத அனுமதி கொடுத்துள்ளீர்கள் என்பது கூட இதற்கு தெரியவில்லை ‘ என்றார்.
சக்கரம் இப்போது நீராடவேண்டும்! இதே சமயம் கடல் நீரால் நனைந்த கருடன் வந்தார். அவரை நோக்கிய ஹனுமான் கிருஷ்ணரை பார்த்து, ‘ இந்த மிக பலவீனமான - மெதுவாக செல்லும் பக்ஷியை வாகனமாக்கிக் கொள்ளவே இது அதிக ப்ரசங்கியாகி விட்டது. இனி மிக வேகமாக எங்காவது செல்ல வேண்டியது அவசியமானால் இந்த அடிமையை - என்னை நினைத்துக் கொள்ளுங்கள் பிரபு‘ என்றார் . காட்டு யாத்திரையின் போது உனது தோளில் ஒரே சமயத்தில் நானும் என் சகோதரன் லக்ஷ்மணனும் உட்கார்ந்திருந்தோமே அன்பா. தலைநகரை அடைந்த பின் இது உசிதமாகத் தோன்றவில்லை. மேலும் உனது இந்த தாய் தனது மகனை யாரும் வாகனமாக்கிக் கொள்வதை ஒப்புக் கொள்ளவில்லை ‘என்றார் ஸ்ரீ கிருஷ்ணர் மிகுந்த அன்போடு .
ஸ்ரீ ருக்மணி, ‘ உன்னை பார்க்க மிகவும் ஆவலாக இருந்தது ஹனுமான் ‘ என்றார். தாய்க்குத் தன் அன்புக்குரிய மகனைக் காண விருப்பமிருந்தது இயல்பான விஷயம்தான். ஹனுமானுக்கு இப்பொழுது, தான் எதற்காக அழைக்கப்பட்டோம் என்பதை கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.
கருடன், சக்கரம், சத்யபாமா எல்லோருமே சக்தி, வேகம், அழகு, நற்குணம் ஆகியவற்றின் இருப்பிடமே ஸ்ரீ கிருஷ்ணர்தான் என்பதைப் புரிந்து கொண்டு விட்டனர். ஸ்ரீ கிருஷ்ணர் யார் மீது அருள் புரிகிறாரோ அவர்களே இந்த நற்குணங்கள் நிறைந்தவராக முடியும்.
இப்படியாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பிரியத்திற்கு உடையவர்களின் கர்வத்தை போக்கி அவர்களை என்றும் பக்தியுடன் இருக்க செய்கிறார்.