மகாராஷ்டிரா, ஷஹ்யாத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள பந்தாதரா, மலைச் சிகரங்கள், அருவிகள், பசுமை பூக்கும் சோலைகள் அடர்ந்த பகுதி. மும்பையிலிருந்து 177 கி.மீ. தூரம். அகத்திய மாமுனிவர் கடுந்தவம் புரிந்த ஆர்தர் ஏரி பந்தாதரா அருகில் உள்ளது. நீரும், காற்றும் அருந்தி கடுந்தவம் புரிந்த முனிவரின் தவத்தில் மெச்சிய இறைவன், அவருக்கு கங்கை நதியை வழங்கி வரமருளினார். பிற்காலத்தில், பிராவரா நதி தீரத்தில் அமைந்த அகத்தியரின் ஆசிரமத்திற்கு ஆசிபெற ராமனும், லட்சுமணனும் வந்தார்கள். அங்கு ராமனுக்கு வில் கொடுத்து ஆசீர்வதித்தார் அகத்தியர். இந்த வில்லைக் கொண்டு தான் ராமன், ராவணனைக் கொன்று சீதையை மீட்டார். பந்தாதராவிற்கு அருகில் இருக்கும் 1646 மீட்டர் உயரம் கொண்ட கல்சுபாய் மகாராஷ்டிராவின் மிக உயர்ந்த சிகரம். இந்த சிகரத்தில் அமர்ந்து தான் மராத்தியர்கள் எதிரிகளைக் கண்காணித்தனர். அம்ரித்தீஸ்வர் கோயிலும் ரத்னாகாட் கோட்டையும் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்.