பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு பாதுகாப்பு படையினர், நேற்று ஆய்வு செய்தனர். இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு, பயங்கரவாதிகள் மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக, 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர். இந்த எண்ணிக்கை, 195 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்ட, சிறப்பு பாதுகாப்பு படை பிரிவு, டி.எஸ்.பி., வசந்தன், நேற்று மீனாட்சி கோவிலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். கோவிலில் உள்ள, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்தார். பாதுகாப்பை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.