பதிவு செய்த நாள்
04
ஜூன்
2019
12:06
கிருஷ்ணகிரி: காளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் செட்டிமாரம்பட்டி கிராமத்தில் உள்ள, மஹாகணபதி, மாரியம்மன், காளியம்மன் கோவில் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேக விழா வரும், 6ல் நடக்க உள்ளது.
இதையொட்டி, நேற்று (ஜூன்., 3ல்) காலை, 9:00 மணிக்கு, கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி, தென்பெண்ணை ஆற்றில் இருந்து, மேள தாளம் முழங்க தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு வந்தனர். அங்கு, அம்மன் சிலைகளுக்கு, புனிதநீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜூன்., 4ல்), வாஸ்து சாந்தி, முதலாம் கால யாகசாலை பிரவேசமும், 5 காலை கும்ப அலங்காரம், கணபதி ஹோமம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜையும் நடக்க உள்ளது. மாலையில், கோ பூஜையும், மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 6 காலை, 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செட்டிமாரம்பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.