காஞ்சிபுரம்: காஞ்சி அத்திவரதரை தரிசிக்க அறிமுகம் செய்யப்பட்ட விரைவு தரிசனத்துக்கு 300 ரூபாய் டிக்கெட்டில் தினமும் 2000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் வைபவத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை விரைவாக தரிசிக்க முதலில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இரு நாட்களுக்கு முன் 1000 பேராக உயர்த்தப்பட்டு தற்போது ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தி வரதர் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தலைமை செயலர் உத்தரவுப்படி குடிநீர் கழிப்பறை வசதிகளை கூடுதலாக்கி உள்ளோம். அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளோம்.கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதியை 16 பகுதிகளாக பிரித்துள்ளோம். ஒவ்வொரு பகுதிகளிலும் நகராட்சி சுகாதாரம் போலீஸ் போக்குவரத்து வருவாய் துறை என ஒன்பது துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று ஷிப்டுகளில் அவர்கள் பணியாற்றுவர்.இந்த 16 பகுதிகளில் உள்ள சுகாதாரம் போக்குவரத்து நெரிசல் பக்தர்கள் வசதி உள்ளிட்டவற்றை அவர்கள் கண்காணிப்பர். இதுவரை அன்னதானம் வழங்க 23 பேருக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் குடும்பத்துக்கு சிறப்பு அனுமதி: வி.ஐ.பி. நுழைவாயிலில் டோனர் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தலைமை செயலர் சண்முகம் உறுதியாக தெரிவித்திருந்தார். ஆனால் எந்தவித பாஸ் இல்லாமல் போலீசார் குடும்பத்தினர் கும்பல் கும்பலாக வி.ஐ.பி. தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் குடும்பத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்க யார் அனுமதி வழங்கியது என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.