பதிவு செய்த நாள்
03
ஆக
2019
03:08
கடலுார்: கடலுார் மாவட்டத்தில், 2018-19ல் கிராமப்புறங்களில் நலிவடைந்த 63 கோவில்களில், தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி, திருப்பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், இந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் 1,655 கோவில்கள் உள்ளன. இதில், 5 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்குட்பட்ட 1,417 கோவில்களும், 5 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் வருவாய் உள்ள 238 கோவில்களும் உள்ளன. இதுமட்டுமின்றி பட்டியலில் சேராத ஏராளமான கிராமப்புற கோவில்கள் உள்ளன.
மாவட்டம் முழுவதும் கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில், வரதராஜ பெரு மாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், மண வாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில், திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் உட்பட 21 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது.விருத்தாசலத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில், ரூ.4.14 கோடியில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
அதே போல், கிராமப்புறங்களில் நலிவடைந்துள்ள கோவில்களை புனரமைத்து திருப்பணி செய்ய அரசு தலா 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கி வருகிறது. அதில், கிராம மக்கள், உபய தாரர்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், கோவில் கட்டுவது, முன் மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கடந்த 2017-18 ல் 34 கிராமப்புற கோவில்கள், 42 ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் கோவில்கள் என 76 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடந்து வருகிறது.
இதில், 35, கோவில்களில் திருப்பணிகள் முடிந்துள்ளன. 41 கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது.நடப்பு 2018-19ல், கிராமப்புற கோவில்கள் 23; ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் கோவில்கள் 40 என 63 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 1 லட்சம் ரூபாயில் திருப்பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-20ல் திருப்பணி செய்ய வேண்டிய கிராம புற நலிவடைந்த கோவில்களை பரிந்துரைக்கும்படி ஆணையரிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது.இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், ’கடலுார் மாவட்டத்தில் 2018-19ல் 63 கோவில்கள் திருப்பணி செய்ய தலா 1 லட்சம் நிதி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோவில் இடம் இறால் குட்டை அமைத்து தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இந்த இடம் மீட்கப்பட்டது.அதே போல், 2001 இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவில் இடங்களில் உள்ள கடைகளில் வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2016 இந்துசமய அறநிலையத்துறை சட்டம் 34-ஏ வின்படி சந்தை மதிப்புக்கு ஏற்ப, வாடகை நிர்ணயித்து வசூலிக்கப்படும்’ என்றார்.