பதிவு செய்த நாள்
06
ஆக
2019
03:08
ஓமலூர்: பத்து ஆண்டுகளுக்கு பின், மழை வேண்டி கிராம மக்கள், ’எல்லை பன்றி குத்துதல்’ நூதன விழா நடத்தினர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் எம்.செட்டிப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், ஓராண்டாக மழையின்றி ஏரி, குளம், கிணறு ஆகியவை வறண்டுள்ளன.
இதையடுத்து, பழங்கால முறைப்படி, மழை வேண்டி கிராம மக்கள் ’எல்லைப்பன்றி குத்துதல்’ சிறப்பு பூஜைக்கு தயாராகினர். நேற்று (ஆக., 5ல்) மதியம், எம்.செட்டிப்பட்டி ஊருக்கு நடுவே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், மக்கள் ஒன்று கூடி, சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பன்றிக்கு பூஜை செய்து, மேள, தாளத்துடன் ஊர்வலமாக பெரியேரிப்பட்டி- எம்.செட்டிப்பட்டி எல்லையில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு, முனியப்பனுக்கு பூஜை செய்து, பன்றியை குளிப்பாட்டி எதிரே உள்ள தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
பின், நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பகுதி மக்களை வரவழைத்து, அவர்களுக்கும், வேட்டை நாய்களான கோம்பை, ராஜபாளையம், நாட்டு நாய்கள் ஆகியவற்றுக்கு மரியாதை செய்து, பன்றியை வேட்டையாடும் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். தயாராக இருந்த வேட்டை நாய்களுக்கு இடையே, பன்றியை அவிழ்த்து விட்டவுடன். பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், பன்றியை துரத்தி சென்று வேட்டையாடியன. பின்னர், நாயக்கர் இனத்தை சேர்ந்த ஆண்கள், ஈட்டி மூலம் பன்றியை குத்தி தூக்கி வழிபாடு நடத்தினர். இந்நிகழ்ச்சியை ஏராளமான கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இவ்வாறு செய்வதன் மூலம், வருண பகவான் மழை பொழிவார் என, ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக, மக்கள் தெரிவித்தனர்.