அம்பாசமுத்திரம் : அம்பாசமுத்திரம் காசிநாதருக்கு வெள்ளியினாலான நாகாபரணம் அணிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற கோயில்களில், அம்பாசமுத்திரத்தில் காசிப முனிவர் வழிபட்ட மரகதாம்பிகை சமேத காசிநாத சுவாமி கோயிலும் ஒன்றாகும். சூரிய குலத்தரசர்கள், அந்தணர், பிரமோதனன், சிவசன்மா ஆகியோருடன் நாரதர் சாபத்தால் குயிலான கந்தருவனும் சாபம் நீங்கி இன்பம் பெற்றது இத்தலம் என புராணங்கள் கூறுகின்றன. காசிநாதருக்கு நேற்று, டி.வி.எஸ்., மோட்டார் தலைவர் கே.என். ராதாகிருஷ்ணன் 4.5 கிலோ எடையில் கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளியினாலான ஐந்து தலையுடன் கூடிய நாகாபரணத்தையும், விபூதி பட்டையையும் வழங்கினார். இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் ஆகும். கணபதி பூஜை, ருத்ர ஹோமத்தையடுத்து, நாகாபரணத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வேதபாராயணங்கள் முழங்க காசிநாதருக்கு கோயில் அர்ச்சகர் கெய்தீஸ்வர பட்டர் நாகாபரணத்தை அணிவித்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஸ்தபதி ஞானசுப்பிரமணியன், கோயில் அலுவலர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.